பக்கம் எண் :

281

 

மாரி அன்ன வண்மைத் தேர் வேள் ஆயை - மழைபோன்ற
வண்மையையுடைய தேரினையுடைய வேள் ஆயை; காணிய
சென்மே - காணச் செல்வாயாக எ-று.

     “விரைவளர் கூந்தல் வரைவளி யுளர” வென்றது, “கொண்டை மேற்
காற்றடிக்க” என்றதொரு வழக்குப்பற்றி நின்றது. என்றதனாற்
பயன்,பிறிதொன்றால் இடையூறில்லை யென்பதாம். ஆய் மாரி யன்ன
வண்மையனாதலின் விறலியை அம் மாரியைக் கண்ட மயில்போலக்
களித்துச் செல் லென்றவாறாம். யாழ நின்றென்று பாடமோதுவாரு முளர்.

      விளக்கம் :மாண்ட நின் என்புழி, யாழ நின் என்றும்
பாடமுண்டென உரைகாரர் கூறுகின்றார். யாழ வென்பது அசைநிலை.
ஆயது புகழ் கூறக்கேட்ட மாத்திரையே காண்டல் வேட்கை மிக்கு
மெலிவுற்று நின்றமை தோன்ற, “மெல்லியல் விறலி” யென்றார்.
வளியுளரப்பட்ட கூந்தல் மயிற்றோகைபோல் விளங்குதலால், மயில்போற்
செல்க என்றார். “கொடிச்சி கூந்தல் போலத் தோகை யருஞ்சிறை
விரிக்கும்” (ஐங். 300) என்று சான்றோர் கூறுதல் காண்க. ஆயின்
கொடையை மாரியன்ன வண்மை யென்றது, பயனோக்காது வேண்டுமிடத்து
நீரைச் சொரியும் மாரிபோல, ஆய்அண்டிரனும் இரப்பார்க் கீதல் தன்
கடனெனக் கருதி யொழுகினா னென்பது வற்புறுத்தி நின்றது. “இம்மைச்
செய்தது மறுமைக்காமெனும், அறவிலை வணிகன் ஆயலன்” (புறம். 134)
என்று பிறாண்டும் இவ்வாசிரியர் கூறுதல் காண்க.

                134. வேள் ஆய் அண்டிரன்

     “உலகத்துச் செல்வர் பலரும் தம்பால் உள்ள செல்வத்தைப்
பரிசிலர்க்கு வழங்குவது இம்மையிற் புகழும் மறுமையிற் றுறக்க வின்பமும்
குறித்தேயாகும்; ஆகவே, இப்பயன்கருதிக் கொடைவழங்கும் அவர்கள்,
பொருள் கொடுத்து மறுமை யின்பம் கோடலின், ஓராற்றால் அறவிலை
வணிகரே யாகும்; அவர் தொகையுள் ஆய் அண்டிரனும் அமைவன்
போலும்” எனச் சான்றோரிடையே ஒருகால் பேச்சு நிகழ்ந்ததாக,
ஏணிச்சேரி முடமோசியார், “ஆய் அத்தகைய னல்லன்; இல்லார்க்கு
வேண்டுவன நல்கி அவரையும் தம்மைப்போல உலகியலில் நுகர்வன
நுகர்வித்தல் உடையோர்க்குக் கடனாம் என்னும் சால்பு சான்றோர்க்குரியது;
அதனையே சான்றோரும் தக்கதென நிகழ்வது ஆய் அண்டிரனது கொடை”
என இப்பாட்டின்கண் அச் சான்றோர்க்கு வற்புறுத்தியுள்ளார்.

இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிக னாயலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே.
(134)

     திணை : அது. துறை : இயன்மொழி. அவனை அவர் பாடியது.


     * இவ்வழக்கு கீழ்மக்களிடையே இந்நாளில் இக்கருத்தே
தோன்ற இடக்கர் வாய்பாட்டில் வழங்குகிறது.