| உரை : இம்மைச் செய்தது - இப் பிறப்பின்கட் செய்த தொன்று; மறுமைக்காம் - மறுபிறப்பிற் குதவும்; எனும் அறவிலை வணிகன் ஆய் அலன் - என்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறங்கொள்ளும் வணிகன் ஆய் அல்லன்; சான்றோர் பிறரும் சென்ற நெறி என - அமைந்தோர் பிறரும் போயவழி யென்று உலகத்தார் கருத; ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மை - அந்த நற்செய்கையிலே பட்டது அவனது கைவண்ணம் எ-று.
அன்றி, ஆய் அறவிலை வணிகன் அல்லன்; பிறரும் சான்றோர் சென்ற நெறி யெனக் கருதி அச் செய்கையிலே பட்டதன்று அவன் கைவண்மை யென்றுரைப்பாரு முளர். இதற்குப் பட்டன்றென்பது மறைப்பொருள் படாமையின், பட்டதன்றென்பது பட்டன்றென விகாரமாகக் கொள்க.
விளக்கம் : மறுமைப் பயன் அறப்பயனாதலின், இம்மையில் நலம்செய்து மறுமையில் இன்பம் கருதுவோரை அறவிலை வணிகர்” என்றார். அமைந்தோர், நற்பண்புகளால் நிறைந்தவர். என என்பதற்கு என்று கருத வென்றுரைத்தவர் கருதுதலைச் செய்தற்குரியவர் இவரென்பார் உலகத்தார்” என்றார். பட்டன்று, பட்டது; அணிந்தன்று” என்றாற்போல. பிறர் கூறுமாறு உரை கொள்வதாயின், பட்ட தன்றென்பது பட்டன்றென நின்றதென வுரைத்தல் வேண்டும்; இன்றேல், பட்டன்றென்பது எதிர்மறைப் பொருள் தாராது என அறிக.
135. வேள் ஆய் அண்டிரன்
ஏணிச்சேரி முடமோசியார், முதன்முதலாக ஆய் அண்டிரனுடைய வண்மை, ஆண்மை, உடைமை முதலியவற்றான் உளதாகிய புகழைக் கேள்வியுற்று அவனைக் காணச் சென்றார். அவனும் அவனது புலமை நலமும் மனநலமும் கேள்வியுற்றிருந்தானாதலின், அவரை அவர் வரிசையறிந்து வரவேற்றுத் தக்க சிறப்பினைச் செய்தான். அவன் வழக்கம்போல் மிக்க வளவிய களிறும் மாவும் தேரு முதலிய பலவற்றைப் பரிசிலாகத் தர முற்பட்டான். அதனையறிந்த மோசியார், தாம் கூறக்கருதுவதை நேர்முகமாகக் கூறின், அவன் அன்பு மிக வுடைமையாற் பட்டாங்குக் கொள்ளானென்று நினைந்து ஒரு பாணன் கூற்றாக வரும் பரிசிற்றுறைப் பாட்டொன்றில் வைத்து, மாவேள் ஆய், விறலி யென்பின்னே வர, படுமலைப் பண்ணுக்குரிய சிறிய யாழை ஒருபுடை தழுவிக் கொண்டு நின்னுடைய நல்லிசையை நினைந்து வரும் யான்; இப்போது வந்தது நின்னைக் காண்டல் வேண்டியே யன்றிக், களிறும் மாவும் தேரும், வேண்டியன்று. நின் செல்வத்தைப் பரிசிலர், தமதென வளைத்துக் கொள்வாராயின், இல்லை, இஃது எனது என்று சொல்லு தலையறியாத வண்மை நிறைந்த மனமுடைய நீ பல்லூழி வாழ்வாயாக” என்று வாழ்த்திப் பாடினார். அப்பாட்டே இப்பாட்டு. இத் தொகை நூலில் பாட்டுக்கள் பலவும் அவரவர் வரலாற்று முறைபற்றித் தொகுக்கப்படாமையின் இஃது ஈண்டுக் காணப்படுகிறது. |