| எங்கோ பேகன்; அவன் கைவண்மை மறுமை நோக்கிற்றன்று பிறர் வறுமை நோக்கிற் றெனக் கூட்டுக. நின்னினும் புல்லியேம் மன்என்பது பண்டு காடு மன்என்பதுபோல நின்றது. ஒழிந்த மன்: அசைநிலை.
விளக்கம்:பாணாற்றுப்படை வாயிலாகப் பேகன் புகழைப் பாராட்டுகின்றவர், தம்மையும் பாணனாக நாட்டிக்கொண்டமையின், தம்மைக் காணும் பாணன்முன் தாமிருக்கும் நிலையினை, பாணன் சூடிய தாமரைப் பூவும் விறலியணிந்த பொன்னரி மாலையும் விளக்கமுற விருப்பத்தை யெடுத்தோதினார். சுரத்திடத்தே யிருந்தாராயினும் வேண்டுவ நிரம்பப்பெற்று இனிதிருத்தல் தோன்ற, ஊரீர் போல இருந்தனிர் என்றதாகக் கூறினார். இதனால் பேகனது காவற்சிறப்பும் ஓராற்றால் வெளிப்படுகிறது. வறுமையால் வாடி மேனியும் முகமும் கருத்துத் தோன்றுதலால், காரென் ஒக்கல்என வேண்டிற்று. தமது செல்வ நிலை, வந்த பாணன் இனிது கண்டறிய விளங்குதலால், இன்னேமாயினேம்என்றொழிந்தார். மயில்கள் படாம் பெறின், அவற்றை உடுப்பதோ மெய்ம்மறையப் போர்த்துக் கொள்வதோ செய்யாவாயினும், மயிற்குப் படாஅம் நல்கின கொடை மடம் விளங்க, உடாஅ போரா ஆகுதலறிந்தும்என்றார். உடா, போரா எனப் பன்மையாற்கூறியது, மயில்கள் பலவும் எஞ்சாமல் அடக்கி நின்றது. மயில்களின் பொதுவியல்பாகிய இதனை யறிந்து வைத்தும், படாஅம் ஈந்தான் என்றது, நும்பால் வேண்டப்படாத மிகச் சிறந்த பொருளையும் அவன் நுமக்கு மிக நல்குவன் என்ற குறிப்புத்தோன்ற நின்றது. படாம், துகில். ஈத்தல் நன்றென மறுமை நோக்காது வறுமை நோக்கின்று என இயையும். மன்: ஒழியிசை.
142. வையாவிக் கோப்பெரும் பேகன்
வையாவிக் கோப்பெரும் பேகனது கொடைநலத்தைப்பற்றிச் சான்றோரிடையே ஒரு சொல்லாடல் நிகழ்ந்தபோது, அவருட் சிலர் அவன் மஞ்ஞைக்குப் படாம் ஈத்ததும், தன்பால் வரும் இரவலருள் முன் வந்தோர் பின் வந்தோரென அறியாது வழங்குவதும் பற்றி அவற்கு மடம்பட மொழிந்தனர். அதுகேட்ட பரணர், கழற்கால் பேகன், வரையாது வழங்குமுகத்தால் மாரி போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரின்கண் மடம்படுவதிலன்என்ற கருத்தமைந்த இப் பாட்டைப் பாடிக் காட்டியுள்ளார்.
| அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும் உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும் வரையா மரபின் மாரி போலக் கடாஅ யானைக் கழற்காற்பேகன் | 5 | கொடைமடம் படுத லல்லது | | படைமடம் படான்பிறர் படைமயக் குறினே (142) |
திணை: அது. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது. |