| மனைவாழும் மகளிர்க்கு விருந்து புறந்தருதல் மாண்பாதலை. கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின், விருந்துபுறந் தருதலும் சுற்றமோம்பலும், பிறவு மன்ன கிழவோள் மாண்புகள் (கற்பு.11) என ஆசிரியர் ஓதுவது காண்க. மகளிர்பால் மென்மையும், பகைவர்பால் வன்மையும் காட்டும் அவனது இயல்பை, மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்பஎன்றார்;வணங்குசிலை பொருத நின் மணங்கமழகலம், மகளிர்க் கல்லது மலைப்பறி யலையே (பதிற்.63) என்று பிறரும் கூறுதல் காண்க. செய்திரங்காவினை யென்பதற்கு முன்னொரு தொழிலைச் செய்து பின் பிழைக்கச் செய்தேம் என்று கருதாத செய்கை யென்று பொருள் கூறியது செய்து பின்னிரங்காவினை (அகம்.268) என்றும், எற்றென் றிரங்குவசெய்யற்க (குறள்.655) என்றும் சான்றோர் கூறியதை யுட்கொண்டென வறிக. இங்கே கூறிய நற்பண்புடையோரை யணுகிக் காண்பதுவும் அவர் குணங்கள் உரைப்பதுவும் நலமென்பதுபற்றி, எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே என்றார். 11. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ இச்சேரமான் முடிவேந்தர் மூவருள் ஒருவனாதலேயன்றி, நல்லிசைச் செய்யுள் பாடும் சான்றோர் கூட்டத்தும் ஒருவனாவன். இவன் பாடிய பாட்டுக்கள் பலவும் பாலைத் திணைக்குரியனவாகும். பாலைக்கலி முற்றும் இவன் பாடியனவே. நற்றிணை, குறுந்தொகை, அகம் முதலிய தொகை நூல்களுட் காணப்படும் பாலைப்பாட்டுகளுட் பல இவனாற்பாடப்பட்டவை. இப்பாட்டுக்கள் அனைத்தும் இலக்கிய வளமும் அறவுணர்வும் நல்லிசை மாண்பும் உடையன. கொண்கானநாடு பொன் மிகவுடையதென்றும், அதனை யுடையவன் நன்னன் என்றும், அந்நாட்டிலுள்ள ஏழிற் குன்றம் மிக்க பொருணலமுடையதாகலின் பெறலரிது என்றும் பாராட்டிக் கூறுவன்; வேனிற்காலத்தில் குயில்கள் மாம்பொழிலிலிருந்துபுணர்ந்தீர் புணர்மினோ என இசைக்கும் என்பதும், கிழவோ ரின்னா ரென்னாது பொருள்தான், பழவினை மருங்கிற் பெயர்பு பெயர் புறையும் என்பதும் பிறவும் இவனது மன மாண்புலமையைப் புலப்படுத்தும். போரில் பகைவர் படையால் உடல் சிதைந்து உயிர் கெட்ட வீரனை, அருங்கடன் இறுத்த பெருஞ்செயாளன் என்றும், அவன் யாண்டுளன் எனில் சேண்விளங்கு நல்லிசை நிறீஇ, நாநவில் புலவர் வாயுளானே (புறம்.282) என்றும் கூறுவது இவனுடைய மறப்பண்பை வலியுறுத்தும். இச்சேரமானைப் பேய்மகள் இளவெயினி யென்பார் பாடியுள்ளார். பேய்மகள் கட்புலனாகாத வடிவுடையளாதலால், கட்புலனாமாறு பெண்வடிகொண்டு இளவெயினியென்னும் பெயருடன் நின்று இதனைப் பாடினானென்று இவ்வுரைகாரர் காலத்தே சிலர் கூறியிருக்கின்றனர்.போர்க்களத்துப் பிணந்தின்னும் பேய்மகளிரை வியந்து விரியப் பாடிய சிறப்பால் , இளவெயினியார்க்குப் பேய்மகளென்பது சிறப்புப்பெயரா யமைந்ததாகல் வேண்டும். இளவெயினியென்பது இவர் இயற்பெயர். குறமகள் இளவெயினி யென்பார் ஒருவர் சான்றோர் குழாத்துட் காணப்படுதலின், அவரின் வேறுபடுத்த இவரை இவ்வாறு சிறப்பித்தனர். குறமகள் என்றதை, குறிஞ்சிநிலத்து நன்மகள் என்று கொள்ளாது குறக்குடியிற் பிறந்த மகளென்று பிழைபடக் கொண்டது போல, இவரைப்பேய் மகளென்று கோடல் அறமாகாது. |