பக்கம் எண் :

316

 

செல்வத் தோன்றலைக் கண்டு தொழுதற்கெழுந்த  என்னை, வருத்தமும்
உலைவும் நோக்கி அருள் கொண்டு எழாவாறு தடுத்து
இருக்கச் செய்தான் என நள்ளியின் அன்பு நலத்தைக் “கைகவித் திரீஇ”
யென்பதனால் தோற்றுவித்தார். பல்வேறிடங்களிற் சிதறிச் சென்றிருந்த
இளையர் வந்து தொக்க வழி, தன் பெயரும் வரவும் வெளிப்படுமெனக்
கருதி, “இளையர் வல்லே வந்தெய்தா அளவை”என்றார். காய் பசி நீங்கி
யென்றவிடத்து, நீங்கி யென்பது நீங்கவெனத் திரிக்கப்பட்டது. விடுத்தல்
தொடங்கினேன் விடைகொள்ளத் தொடங்கினேன். மடை, மடுக்கப்படுவது;
பற்றவைப்பு. நன்கலம் கடகமொடு ஈந்தான்; பசித்துயர் போக்கி, நன்கலம்
ஈந்தானைப் பெயரும் நாடும் கூறுமாறு கேட்டேன்; எனக்கு அவற்றை
யவன் கூறிற்றிலன் என்பார், அவனது செல்வப் பணிவுடைமையின் சிறப்புப்
புலப்பட, “எந்நாடோ வென நாடுஞ் சொல்லான், யாரீரோ வெனப் பேருஞ்
சொல்லான்”என்றார். வழிக் கேட்டிசின் - வழியின்கண் பிறர் தம்மிற் கூறக்
கேட்டேன். முன்னிலைக்குரிய இசின், கேட்டிசின் எனத் தன்மைக்கண்
வந்தது; “இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடுந், தகுநிலை யுடைய
என்மனார் புலவர்”(தொல். இடை 27) என்பதனால் இஃதமைவதாயிற்று.
மதுரைக்குத் தெற்கிலுள்ள மலைநாட்டில் ஒரு பகுதி கண்டீரக் கோப்பெரு
நள்ளிக் குரியதாகும். நள்ளி யென்னும் பெயருடையதோர் ஊர் அந்நாட்டில்
உளது.

                    151. இளவிச்சிக் கோ

     இவ் வேந்தனுடைய இயற்பெயர் தெரிந்திலது. விச்சி யென்பது
ஒரு மலை. அதனைச் சூழ்ந்த நாடு விச்சி நாடென்றும், அந் நாட்டரசன்
விச்சிக் கோ வென்றும் வழங்குப. விச்சியின் இளவரசன் இளவிச்சிக் கோ
எனப்பட்டான். இளவிச்சிக் கோவும், இளங்கண்டீரக் கோவும் நெருங்கிய
நண்பர். கண்டீரக் கோப்பெரு நள்ளிக்கு இளையோனாதலின் இவன் இளங்
கண்டீரக் கோ எனப்படுவானாயினான். ஒருகால், இளங் கண்டீரக் கோவின்
திருமனையில் இளவிச்சிக் கோவும் வந்திருந்தான். இருவரும்
ஒருங்கிருக்கையிற் சான்றோரான பெருந்தலைச் சாத்தனார் கண்டீரக்
கோவைக் காண வந்தார். வந்தவர், இளங்கோக்கள் இருவரையும் கண்டார்.
இருவரும் அவரை மனங் கனிந்து வரவேற்றனர். ஆயினும், அச் சான்றோர்
இளங்கண்டீரக் கோவைப் புல்லிக்கொண்டு, இளவிச்சிக் கோவைப் புல்லா
தொழிந்தார். இளவிச்சிக்கு இது மிக்க வருத்தத்தைச் செய்தது. அவன்
கள்ளமில் உள்ளத்தனாகலின், சிறிதும் தாழாது “என்னை நீவிர் புல்லா
தொழிந்ததேன்?”என்று வினவினன். அவற்குப் பெருந்தலைச் சாத்தனார்
விடையிறுப்பாராய், இப் பாட்டின்கண், “வேந்தே, இக் கண்டீரக் கோ
வண்மையாற் புகழ் சிறந்தவன். இவன் நாட்டில் மனைக்கிழவன் சேட்புலம்
சென்றிருப்பினும், மனைக்கிழமை பூண்ட மகளிர் தம் தகுதிக்கேற்பனவற்றை
இரவலர்க் கீந்து இசை வளர்ப்பர்; அதனால் இக் கண்டீரக் கோவைப்
புல்லினேன். நின் முன்னோருள் முதல்வன் பெண் கொலை புரிந்த
நன்னனாவான். நின் நாடு பாடி வருவார்க்குக் கதவடைத்து மறுக்கும்
நீர்மையது. அதனால் எம் போல்வார் நினது விச்சி மால்வரையைப் பாடுத
லொழிந்தனர். அதனால் அம் மலைக்குரிய நின்னைப் புல்லேனாயினேன்”
என்று கூறினார்.