| | நன்னன் மருக னன்றியு நீயும் முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப் | 10 | பாடுநர்க் கடைத்த கதவி னாடுமழை | | அணங்குசா லடுக்கம் பொழியுநும் மணங்கமழ் மால்வரை வரைந்தன ரெமரே. (151) |
திணையும் துறையு மவை. இளங்கண்டீரக் கோவும் இளவிச்சிக் கோவும் ஒருங்கிருந்தவழிச் சென்ற பெருந்தலைச் சாத்தனார், இளங்கண்டீரக் கோவைப் புல்லி இளவிச்சிக் கோவைப் புல்லாராக, என்னை என்செயப் புல்லீராயினீ ரென அவர் பாடியது.
உரை: பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப - முன்பேயும் முன்பேயும் பாடுவார் விரும்ப; விண் தோய் சிமைய விறல் வரைக்கவாஅன் - விசும்பைப் பொருந்திய உச்சியையுடைய சிறந்த மலைப்பக்கத்து; சேட் புலம் கிழவன் படரின் - நெடுந்தூரத்தே தம் கணவன் செல்லின்; இழை யணிந்து - ஆபரணத்தை யணிந்து; புன்றலை மடப் பிடி - புல்லிய தலையையுடைய மெல்லிய பிடியை; பரிசிலாக - பரிசிலாகக் கொண்டு; பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் -அவர் பெண்டிரும் தம் தரத்திலே பரிசில் கொடுக்கும்; வண் புகழ்க் கண்டீரக் கோனாகலின் - வள்ளிய புகழையுடைய கண்டீரக் கோனாதலாலே; நன்றும் யான் முயங்கல் ஆன்றிசின் - பெரிதும் யான் தழுவிக்கொள்ளுதலை யமைந்தேன்; பொலம் தேர் நன்னன் மருகன் அன்றியும் - பொன்னாற் செய்யப்பட்ட தேரினையுடைய நன்னன் மரபினுள்ளாயாத லன்றியும்; நீயும் முயங்கற்கு ஒத்தனை மன் - நீயும் தழுவுதற்குப் பொருந்தினாய், ஆயினும்; வயங்கு மொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின் - விளங்கும் மொழியையுடைய பாடுவார்க்கு அடைத்த கதவு காரணமாக; ஆடு மழை அணங்கு சால் அடுக்கம் பொழியும் - இயங்கும் முகில் தெய்வமமைந்த அரைமலைக் கண்ணே சொரியும்; மணங் கமழ் மால் வரை எமர் வரைந்தனர் - நுமது மணநாறும் உயர்ந்த மலையை எம் முள்ளார் பாடுதலை நீக்கினார், ஆதலான் முயங்கிற்றிலேன் எ-று.
பெண்டிரும் தன் பதம் கொடுக்குமெனவே ஆடவரும் தம் தரத்தே களிறு கொடுத்தல் போந்தது. கிழவன்என்பது ஏவலிளையர் தாய் வயிறு கறிப்பஎன்பது போலப் பன்மை சுட்டி நின்றது. நன்னன் மருக னன்றியும்என்றதற்கு, பெண்கொலை புரிந்த நன்னன் போல, வரையா நிராயத்துச் செலீஇயரோ அன்னை(குறுந்.292) என்றமையின், அதுவும் வரைதற்கு ஒரு காரணமாக வுரைப்பாருமுளர். பதமென்றது, பரிசிலை. மன்: ஒழியிசைக்கண் வந்தது.
விளக்கம்: விறல் மலை, சிறந்த மலை. கவான், மலைப்பக்கம். மனைக்கிழவன் சேட்புலம் சென்றால், மனைக்கிழத்தி தன் தகுதிக்கேற்ப வழங்குவ வழங்கிக் குடிப்புகழைப் பேணுதல் கற்பு மாண்பாதலின், பெண்டிரும் தம் பதம் கொடுக்கும்என்றார். |