| மனையோள், பாணரார்த்தவும் பரிசில ரோம்பவும், ஊணொலி யரவமொடு கைதூவாளே(புறம்.334) என்று பிறரும் கூறுதல் காண்க. பெண்டிரும் என்ற உம்மை எச்சவும்மையாகலின், பெண்டிரும்.......போந்ததுஎன்றார். நன்னன் மருகனாதலால் தழுவிக்கொள்ளற் கொருவா றமைந்தாயாயினும், எமர் பாடுதல் வரைந்தனராதலின், தழீஇக் கொள்ளே னாயினேன் என்பதாம். இங்ஙனம் கொள்ளுமிடத்து, பொலந் தேர் நன்னன், செங்கை மாத்து நன்னன சேய் நன்னனாகக் கோடல் அமையும். வாளா நன்னன் என்றமையின் பெண் கொலைபுரிந்த நன்னனென்று கொண்டு, தழுவாமைக்கு அந்நனன் மருகனாதல் காரணமாகக் கொண்டுரைப்பவரும் உண்டென்றார். அடுக்கம், மலைப்பக்கம்; அரைமலையுமாம். தாய் என்னும் ஒருமை, இளையரை நோக்கப் பன்மை சுட்டி நிற்பதுபோல, கிழவன் என்பதும் பன்மை சுட்டிநின்ற தென்பதாம்.
152. வல்வி லோரி
வேள் பாரி முதலாகக் கூறப்படும் வள்ளல்கள் நிரலில் கூறப்படும் வல்வி லோரி இவனே. இவனைக் கொல்லியாண்ட வல் வில் ஓரி(புறம்.148) எனப் பெருஞ்சித்திரனார் கூறுவது காண்க. இவனை ஆதனோரி யென்றும் சான்றோர் வழங்குப. இக் கொல்லி மலை, பலா, கரு வாழை முதலிய கனியுடை மரங்கள் நிறைந்தது. இம் மலையில் தெய்வங்கள் கூடி அழகு மிக்க பாவை யொன்றைச் செய்துவைத்திருந்தன என்று சான்றோர் கூறுவர். வனப்பு மிக்க மகளிர்க்கு அப் பாவையைச் சான்றோர் உவமமாகக் கூறுவது வழக்கம். அம்மலை ஓரிக்குரியதாயினும் அதனால் அவர்கள் முள்ளூர் மன்னனாகிய காரி யென்பானுக்கும் இந்த வல் வில் ஓர்க்கும் பகைமை தோற்றுவித்து, அதுவே வழியாக அக் கொல்லியைக் காரி யென்பான் கைப்பற்றித் தமக் களித்துவிட வேண்டுமென ஏற்பாடு செய்து கொண்டனர். இதனைத் தன் ஒற்றர்களால் அறிந்துகொண்ட ஓரி, காரியின் முயற்சியைக் கெடுத்தற்குப் போர் தொடுத்தான். ஓரியும் காரியும் தத்தமக்குரிய ஓரி, காரி யென்ற குதிரைமேலேறிப் பொரத் தொடங்கினர். காரிக்குச் சேரர் படை துணை செய்தது. முடிவில் முள்ளூர் மன்னனான காரி ஓரியைக் கொன்று அவனது கொல்லிமலையைத் தான் முன்பு செய்துகொண்ட ஏற்பாட்டிற்கியையச் சேரர்க் களித்தான். இதனைக் கல்லாடனார், செவ்வேல், முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரர்க்கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி(அகம்.209) என்று கூறியுள்ளார். ஓரியைக் கொன்று சிறப்புற்ற, காரி, பின்னர்த் தன் பகைவர் நாட்டிற் புகுந்த காலை ஆண்டெழுந்த ஆரவாரம் பெரிதாயிற்றென்பார், கபிலர், பழவிறல் ஓரிக்கொன்ற வொருபெருந்திருவிற், காரி புக்க நேரார் புலம்போல் கல்லென்றன்றால் (நற். 320) என்று குறித்துள்ளார். இவ்வல்வில் ஓரி பெரிய கொடையாளி; இசைத் துறையில் மிக்க ஈடுபாடுடையன்; இரவலரைப் புரக்கும்பெருங் கடப்பாடுடையன். இவனைக் கபிலர், கல்லாடர், வன்பரணர் முதலியோர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இவற்குப் பல ஆண்டுகட்குப் பின்னர்த் தோன்றிய இடைக் கழிநாட்டு நல்லூர் |