| நீயும் ஒன்று பாடுவாயாக வென்னும் நினைவிற்று. நீரும் என்றது, கூட்டத்தை. மூவேழ் துறையு மென்றது, வலிவு மெலிவு சமமென்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்று ஏழு தானம் முடித்துப் பாடும் பாடற் றுறையை; அன்றி, இருபத்தொரு நரம்பால் தொடுக்கப்படும் பேரியாழ் எனினுமமையும். தம்மினென்பது, தமின் எனக் குறைந்து நின்றது.
கொல்லிப் பொருநனாகிய விறல் வெய்யோன் கோவெனப் பெயரிய காலை, அது தன் பெயராகலின் நாணி வேட்டது மொழியவும் விடானாய் நல்கியோ னெனக் கூட்டுக.
விளக்கம்: யானை வீழ்த்த அம்பாதலின், விழுத்தொடைப் பகழி யென்றார். இதனை விடுத்த ஓரியை, வல் வில் வேட்டுவன்என்றார், ஒரு தொடையில் புலியைக் கொன்று, மானையுருட்டி, பன்றியை வீழ்த்தி, உடும்பிற் சென்று செறிதலின். ஒரு தொடுப்பில் இத்துணை யுயிர்களைக் கொன்றைமையின், கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்றிவன் என்றார். ஓரியின் தோற்றம் செல்வம் மிகவுடைய னென்பதை விளக்கினமையின், விலைவன் போலான்என்றும், வெறுக்கை நன்குடையன்என்றும் கூறினார். மண் மார்ச்சனை. பெருவங்கியத்தைக் களிற்றுயிர் என்றார், அது களிற்றின் கைபோலும் வடிவுடையதாதல்பற்றி. வண்ணம், இசைப்பாட்டு வகை. பிழையா வண்ணங்கள் பாடிநின்றாடுவார், அழையாமே யருள் நல்குமே(ஞானசம்.54:5) என வருதல் காண்க. மதலை மாக்கோல் கைவலம் தம்மின்என்பதன் உரையில், நமது பிறப்புணர்த்தும் கரிய கோல்என அச்சுப் பிரதியிற் காணப்படும் பகுதி சில ஏடுகளில் இல்லை. மூவேழ் துறைகளை, இசைத் தமைத்த கொண் டேழே யேழே நாலேமூன்றியலிசை யியல்பா, வஞ்சத் தேய்வின்றிக்கே மனங்கொளப் பயிற்று வோர்(ஞானசம்.126:11) என்று ஞானசம்பந்தரும் குறித்தன ரென்பர். தம்முன்நிற்போன் வல்விலோரி யென்பதை அறியாராயினும், தாம் வந்திருப்பது அவனது நாடும் காடுமா மென்பதை யறிந்திருத்தலின், அவன் பெயரைக் கோவென்ற சொல்லால் சுட்டி யுரைத்ததை, கோவெனப் பெயரிய காலைஎன்றார். அவனது வல் வில் வேட்டத்தை நேரிற் கண்டமையின், அதனை விதந்தோதற்கு விரும்பின விருப்பை, வேட்டது மொழியவும்என்றார். ஆன் ஆகுபெயரால் அதனது நெய்யை யுணர்த்திற்று. தன்பாற் பேரன்பு கொண்டு தனது புகழைத் தன் முன் பாடிய பரிசிலரை வெறிது விடுத்தல் விழுப்ப மன்றென, ஓரி, மானிணமும் தேனும் பொன்னும் மணியும் கொடுத்தானென்றார்.
153. வல்வி லோரி
வன்பரணரைத் தலைவராகக்கொண்ட பாணர்சுற்றம், ஒருகால் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய செயல்களைச் செய்யாது சோம்பியிருந்தது. அதுகண்ட சான்றோர் சிலர் வியப்புற்று வன்பரணரை வினவினாராக, அவர்கட்கு அவர், என்பாண் சுற்றத்தார் கொல்லிப் பொருநனாகிய வல்வி லோரியைக் காணச் சென்றனர்; அவர்கட்கு அவன் பொன்னரி மாலையும் பிற கலன்களும் களிறுகளும் நல்கிச் சிறப்பித்தான்; அவன்பாற் பெற்ற பெருவளத்தால் அவர் பசி யறியாராயினர்; அதனால் அவர் தமக்குரிய பாடலும் ஆடலும் மறந்தொழிந்தனர்என இப்பாட்டின்கட் குறித்துரைக்கின்றார். |