| | மழையணி குன்றத்துக் கிழவ னாளும் இழையணி யானை யிரப்போர்க் கீயும் சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை அடுபோ ரானா வாத னோரி | 5 | மாரி வண்கொடை காணிய நன்றும் | | சென்றது மன்னெங் கண்ணுளங் கடும்பே பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை வானார்த் தொடுத்த கண்ணியுங் கலனும் யானை யினத்தொடு பெற்றனர் நீங்கிப் | 10 | பசியா ராகன் மாறுகொல் விசிபிணிக் | | கூடுகொ ளின்னியங் கறங்க ஆடலு மொல்லார்தம் பாடலு மறந்தே. (153) |
திணை: அது. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.
உரை: மழை யணி குன்றத்துக் கிழவன் - முகில் சூழ்ந்த மலைக்குத் தலைவன்; நாளும் இழையணி யானை இரப்போரக்கு ஈயும் - நாடோறும் பட்டமுதலாகிய பூண்களை யணிந்த யானையை இரப்போர்க்குக் கொடுக்கும்; சுடர் விடு பசும் பூண் சூர்ப்பு அமை முன் கை - கதிர் விடுகின்ற பசும்பொன்னாற் செய்த அணியினையும் வளைந்த கடகமமைந்த முன் கையினையுமுடைய; அடுபோர் ஆனா ஆதன் ஓரி - கொல்லும் போர் அமையாத ஆதனோரியது; மாரி வண் கொடை காணிய - மழைபோலும் வள்ளிய கொடையைக் காண்டற்கு; நன்றும் சென்றது எம் கண்ணுளங் கடும்பு - மிகவும் சென்றது எம்முடைய கூத்தச் சுற்றம்; பனி நீர்ப் பூவா மணிமிடை குவளை - குளிர்ந்த நீரின்கட் பூவாத மணிமிடைந்த குவளைப் பூவை; வால் நார்த் தொடுத்த கண்ணியும் - வெள்ளிய நாரால் தொடுக்கப்பட்ட பொன்னரி மாலையினையும்; கலனும் - பிற அணிகலங்களையும்; யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி - யானை யணிகளுடனே பெற்றனராய் நீங்கி; பசியா ராகல் மாறுகொல் - பசியாராகலானே கொல்லோதான்; விசி பிணிக் கூடுகொள் இன்னியம் கறங்க - வாரால் வலித்துப் பிணிக்கப்பட்ட பல கருவியும் தொகுதி கொண்ட இனிய இயங்கள் ஒலிப்ப; ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்து - அச்சுற்றத்தார் ஆடுதலு மாட்டாராயினார் தமது பாடுதலையும் மறந்து எ-று.
சூர்ப்புடையதனைச் சூர்ப்பென்றார். குடிமை ஆண்மைத் (தொல். சொல். கிளவி.57) தொடக்கத்தன நின் றாங்கே நின்று உயர்திணை முடியும் பெறுதலின், இக் கடும்பென்பதும் பொருணோக்கால் முடிபு பெற்றது. |