பக்கம் எண் :

325

 

கண்ணுளங் கடும்பென நின்றவழி, அம், அல்வழிச் சாரியை: மன்;
அசைநிலை.

     ஓரி வண் கொடை காணிய கண்ணுளங் கடும்பு சென்றது; சென்ற
பின்றை அக் கடும்பாயினோர் தமது பாடலு மறந்து ஆடலு
மொல்லாராயினார்; *அதற்குக் காரணம் பசி யாராகன் மாறு கொல் எனக்
கூட்டி வினைமுடிவு செய்க. நுண் பூ ணென்று பாடமோதுவாரு முளர்.

     விளக்கம்: சூர்ப்பு, வளைவு; சூர்ப்பமைந்த கடகத்தைச்
சூர்ப்பென்றார்; “சூர்ப்புறு கோல்வளை செறிந்த முன்கை”(அகம்.142)
என்றும், சூர்ப்புறு வளையைச் “சூரமை நுடக்கத்து”(ஐங்.71) என்றும்
சான்றோர் கூறுதல் காண்க. கொடை வழங்குமிடத்து, கொடுப்பாரது
இன்பமும் பெறுவாரது சிறப்பும் காண்டற்கினிமை நல்குதலின், “வண்கொடை
காணிய சென்றது கடும்பு”என்றார். மணி குயிற்றிப் பொன்னாற் செய்யப்பட்ட
குவளையை “மணிமிடை குவளை”யென்றும், ஏனைக் குவளையிற் பிரித்து
வெளிப்படுத்தற்குப் “பனிநீர்ப் பூவா மணி மிடை குவளை”யென்றும்
கூறினார். வால் - வெண்மை; வெண்ணிறத்தையுடைய வெள்ளிக்காயிற்று.
கூடுகொள் இன்னியம் என்றவிடத்துக் கூடு, தொகுதியாம். பிறர்பாற் சென்று
இரத்தற்குரிய வறுமையுள தாயவிடத்து, தாம் கற்ற கல்வியை
வளம்படுத்தற்பொருட்டு, நாளும் அதனைப் பயிறல் வேண்டும்;
அம்முறையே இவர் தம்முடைய பாடல் மறந்து ஆடலும் கைவிட்டிருத்தலின்,
வறுமையுறாதவளமுடையராயினர் என்பது விளங்குதலின், “பசியாராகன்
மாறுகொல்”என்றார்.

                    154. கொண்கானங் கிழான்

     கொண்கான நாடு என்பது பிற்காலத்தே கொங்கண நாடு என
மருவி வழங்குவதாயிற்று. இது சேலம் கோயமுத்தூர் மாநாடுகளின்
கீழ்ப்பகுதி நாடாகும். இந் நாட்டுக் கொங்கு வேளாளார் குடியிற் சிறந்த
வள்ளலாக விளங்கினவன் இக் கொண்கானங் கிழான். இந் நாடு பொன்வளம்
சிறந்தது. இதனால் இதனைப் “பொன்படு கொண்கானம்”(நற்.391) என்று
சான்றோர் பாராட்டியுள்ளனர். மேனாட்டு ஆராய்ச்சியாளர் இப் பகுதியைக்
கண்ணுற்று, “ஒருகாலத்திற் பொன் வளஞ் சிறந்திருந்து இதுபோது குறைந்து
போயிற்’’*றென்று கூறியுள்ளார்.

     இக் கொண்கானங்கிழான் பெருஞ் செல்வத் தோன்றல்
அல்லனாயினும்தன்பால் நாடிவரும் பரிசிலர்க்கு இயன்றன நல்கி
இன்புறுத்தும் ஈகை யியல்பினன். ஈகைக்கேற்ற தாளாண்மையும் அதன்
சிறப்புக் காக்கமாகும் தோளாண்மையும் இவன்பால் மிக்கிருந்தமையின்
புலவர் பலரும் இவனைப் பாடிப் பாராட்டினர்.


* நில நூலாராய்ச்சிப்  பேராசிரியர்  பால் (Prof. Ball, F.R.S.)  என்பார்,
பேராசிரியர் லாசன் (Lassen), பேராசிரியர் ஹீரன் (Heeren) முதலியோர்
கூற்றை மறுத்துச் சங்க இலக்கியம் கூறுமாறு தென்னாட்டிற் பொன் வளம்
ஒருகாலத்து மிக்கிருந்த தென்பதைப் பலவகையால் நிறுவுகின்றார். (Vide Asiatic
Nations, Bohm edm, Voll.II, P.32 Indian Antiquary, August, 1884).