| ஆசிரியர் மோசிகீரனார் சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையால் நன்கு மதித்துப் பேணப்பெற்ற பெருமையுடைய ரென்பதை முன்பே (புறம்.50) கண்டுள்ளோம். இத்தகைய பெரும் புலவர் இக்கொண்கானங் கிழானையும் பாடிப் பரவினரெனின், இவனது சிறப்புத் தெளிய வுணரப்படும். இவன்பால் மோசிகீரனார் வரக் கண்ட இப்பெரியோன், பெருவேந்தராற் பேணிப் பாராட்டப்படும் பெருந் தகுதி வாய்ந்த தாங்கள் மிக எளிய என்பால் எழுந்தருளி எனது ஈகையினைப் பாராட்டுவது என் நல்வினைப் பயனேஎன்றுரைத்து, இவர் வரிசைக் கேற்ப யான் வழங்கும் வளம் பெற்றிலேனேஎனத் தனக்குள் எண்ணமிடலானான். அதனை யுணர்ந்துகொண்ட கீரனார், பரந்த கடலருகே செல்லினும், நீர் வேட்கை கொண்ட மக்கள் சிற்றூறலை நாடிச் செல்வர்; அதுபோல், புலவர் வேந்தராற் பெரிதும் பேணப்படுவாராயினும் வள்ளியோரை நாடிச் செல்வது அவர்க் கியல்பு; அவ்வியல்பே பற்றி யான் நின்னை யுள்ளி வந்தேன்; ஈ யென இரத்தல் அரிதே தவிர, நின் ஆண்மையினையும் நின் கொண்கானத்தையும் பாடுதல் எனக்கு எளிது; மேலும், பெற்றது சிறிதாயினும் அதுவே ஊதியமாகக் கருதுபவன் யான்என்ற கருத்துப்பட இப் பாட்டினைப் பாடியுள்ளார்.
| திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும் அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும் சின்னீர் வினவுவர் மாந்த ரதுபோல் அரச ருழைய ராகவும் புரைதபு | 5 | வள்ளியோர்ப் படர்குவர் புலவ ரதனால் | | யானும், பெற்ற தூதியம் பேறியா தென்னேன் உற்றென னாதலி னுள்ளிவந் தனனே ஈயென விரத்தலோ வரிதே நீயது நல்கினு நல்கா யாயினும் வெல்போர் | 10 | எறிபடைக் கோடா வாண்மை யறுவைத் | | தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத் தண்பல விழிதரு மருவிநின் கொண்பெருங் கானம் பாடலெனக் கெளிதே. (154) |
திணை: அது. துறை: பரிசிற்றுறை. கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது.
உரை: திரை பொரு முந்நீர்க் கரை நணிச் செலினும் - திரை யலைக்கும் கடலினது கரைக்கண் அணியவிடத்தே போகினும்; அறியுநர்க் காணின் - அறிவாரைக் காணின்; வேட்கைநீக்கும் சின்னீர் வினவுவர் மாந்தர் - நீர் வேட்கையினைத் தணிக்கும் சிறிய நீரைக் கேட்பர் உலகத்து மக்கள்; அது போல் - அது போல்; அரசர் உழைய ராகவும் வேந்தரிடத்தராகவும்; |