| இவண்விளங்கு சிறப்பி னியறேர்க் குமண இசைமேந் தோன்றிய வண்மையொடு பகைமேம் படுகநீ யேந்திய வேலே. (158) |
திணை: அது. துறை: வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையுமாம். குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
உரை: முரசு கடிப்பு இகுப்பவும் - முரசு கடிப்பு அறையவும்; வால் வளை துவைப்பவும் - வெள்ளிய சங்கு முழங்கவும்; அரசுடன் பொருத அண்ணல் - வேந்தருடனே பொருத தலைமையையுடைய; நெடுவரை கறங்கு வெள் ளருவி கல் அலைத்தொழுகும் - நெடிய மலைக்கண் ஒலிக்கும் வெளிய அருவி கல்லை யுருட்டி யோடும்; பறம்பின் கோமான் பாரியும் - பறம்பிற்கு வேந்தனாகிய பாரியும்; பிறங்கு மிசைக் கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும் - உயர்ந்த உச்சியையுடைய கொல்லிமலையை ஆண்ட வலிய வில்லையுடைய ஓரியும்; காரி ஊர்ந்து பேரமர் கடந்த - காரி யென்னும் பெயரையுடைய குதிரையைச் செலுத்திப் பெரிய பூசலை வென்ற; மாரி ஈகை - மாரிபோலும் வண்மையையும்; மறப் போர் மலையனும் - மிக்க போரினையுமுடைய மலையனும்; ஊராது ஏந்திய குதிரைக் கூர் வேல் - செலுத்தப்படாது உயர்ந்த குதிரை யென்னும் மலையையும் கூரிய வேலையும்; கூவிளங் கண்ணி - கூவிளங் கண்ணியையும்; கொடும் புண் எழினியும் - வளைந்த ஆரத்தையுமுடைய எழினி அதியமானும்; ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை - மிகக் குளிர்ந்த மலையின்கண் இருள் செறிந்த முழையினையும்; அருந் திறல்கடவுள் காக்கும் - மலைத்தற்கரிய வலியினையுமுடைய தெய்வம் காக்கும்; உயர் சிமைப் பெருங் கல் நாடன் பேகனும் - உயர்ந்த சிகரங்களையுடைய பெரிய மலைநாடனாகிய பேகனும்; திருந்து மொழி மோசி பாடிய ஆயும் - திருந்திய சொல்லையுடைய மோசி யென்னும் புலவனாற் பாடப்பட்ட ஆயும்; ஆர்வ முற்று உள்ளி வருநர் உலைவு நனி தீர - ஆசைப்பட்டுத் தன்னை நினைந்து வருவாருடைய வறுமை மிகவும் நீங்க; தள்ளாது ஈயும் தகை சால் வண்மை - தவிராது கொடுக்கும் கூறுபாடமைந்த வண்மையினையுடைய; கொள்ளார் ஓட்டியநள்ளியும் என - பகைவரைத் துரத்திய நள்ளியும் எனச் சொல்லப்பட்ட; எழுவர் மாய்ந்த பின்றை - எழுவரும் இறந்த பின்பு; அளி வரப் பாடி வருநரும் பிறரும் கூடி - கண்டார்க்கு இரக்கம் வரப் பாடி வருவாரும் பிறரும் கூடி; இரந்தோர் அற்றம் தீர்க்கு என - இரந்தோரது துன்பத்தைத் தீர்க்கக் கடவேன் யான் என்று நீ இருத்தலால்; விரைந்து உள்ளி வந்தனென் யான் - விரைந்து இவ்விடத்தே பரிசில் பெற நினைந்து வந்தேன் யான்; |