| குடுமி, பிறர் மண் இன்னாவாகக்கொண்டு, மலையவும், பண்ணவும், நின் ஆர்வலர் முகத்து இனிய செய்வை: இது நினக்கு அறனோ சொல்லுவாயாக வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. மற்று: அசைநிலை. இது பழித்தது போலப் புகழ்ந்ததாகக் கொள்க.
விளக்கம்:பொன்னாதல் தாமரைப்பூச் செய்து அதனை வெள்ளியாற் செய்த நாரிடைத் தொடுத்தது பொன்னரிமாலை; இதனைப் பாணர்க்கு வழங்குதல் மரபாதலால்,பாணர் தாமரை மலையவும்என்றார்; ஒள்ளழல் புரிந்த தாமரை,வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே(புறம்.11) என்பது காண்க. புலவர்க்குக் களிறும் தேரும் நல்குதலும் பண்டையோர் மரபு: புலவர் புனை தேர் பண்ணவும் என்றார். மலைதல், சூடுதல். பண்ணல், ஏறுதற்கேற்ப அமைத்தல். நுதல், மத்தகத்துக் காயிற்று. பூ, பொற்பட்டம். அன்பு கொள்ளாது பகைமையைக் கொண்டமையின், பகைவேந்தரைப் பிறர் என்றும், அன்பு செய்து பரவிப் புகழ்வாரை ஆர்வலர்என்றும் கூறினார். ஒருவர்க்குரிய நிலத்தைப் பிறர் வலியாற் கொள்ளுமிடத்து உரியார்க்கு வருத்தமுண்டாதல் இயல்பாதலால், பிறர் மண் இன்னாவாகக் கொண்டு என்றார். வேந்தே, நீ ஒருபால் இனிமையும், ஒருபால் இன்னாமையும் செய்தல் அறனோ என்று வினவுவது பழிப்புரை. ஆர்வலர்க்கு இன்பம் செய்தலும், பகைவர்க்கு இன்னாமை செய்தலும் விறல் மாண்ட வேந்தர்க்குப் புகழாதலால்,அதனைக் கூறுதல் புகழாயிற்று.புகழைப்பழி போலக் கூறுதலின், இது பழித்தது போலப் புகழ்ந்ததாகக் கொள்க என்றார். இதனை வஞ்சப் புகழ்ச்சி யென்றும் கூறுப. 13. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி இப்பெருநற்கிள்ளி சோழநாட்டு வேந்தனாய் இருந்து வருகையில் தன்னொடு பகைகொண்ட சேரமன்னரொடு போருடற்றும் கருத்தினனாய்க் கருவூரை முற்றியிருந்தான்.அப்போது சேரநாட்டு மன்னனாவான் சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறை. ஒருநாள் சோழன் கோப்பெருநற்கிள்ளி கருவூரை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் அவன் ஏறிய களிறு மதம்படுவதாயிற்று. அக்காலை ஆசிரியர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் சான்றோர் சேரமன்னனுடன் அவனது அரசமாளிகையாகிய வேண்மாடத்துமேல் இருந்தார். சோழன் களிற்றுமிசை யிருப்பதும், களிறு மதம்பட்டுத் திரிவதும், பாகரும் வீரரும் அதனை யடக்க முயல்வதும் கண்ட சேரமான் மோசியாருக்குக் காட்ட, அவர் இப்பாட்டினைப் பாடினார். முடமோசியார் என்னும் சான்றோர். ஏணிச்சேரி யென்னும் ஊரினர். இவர் உறையூரிடத்தே தங்கியிருந்தமையால், உரையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனப்படுகின்றார். இவர் பாடிய பாட்டுக்கள் பல இத்தொகை நூல்களில் உண்டு. அவை பெரும்பாலும் ஆஅய் அண்டிரனைப் பாடியவை யாதலால் அவன்பால் இவருக்கிருந்த நன்மதிப்பு நன்கு புலனாகும். இப்பாட்டின்கண், களிற்றுமேலிருந்த சோழனை இன்னானென் றறியாது கேட்ட சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறைக்குக் களிற்று மேற் செல்வோனாகிய இவன் யாரெனின், நீர் வளத்தால் மிக்கு விளைந்த நெல்லை யறுக்கும் உழவர், மீனும் கள்ளும் பெறும் நீர்நாட்டை
|