| விளக்கம்: தேம்பு பசி - உடல் மெலிந்து கெடுதற்கு ஏதுவாகிய பசி. இப் பசியால் சாத்தனாருடைய மனைவியிடத்துப் பால் இலதாயிற்று. பொல்லா வறுமுலை யென்றார், பெற்ற சேய்க்குப் பயன்படாது பாலின்மையால் மிக்க மனநோயைத் தருதல்பற்றி. சேய் துயரும், தாய் துயரும் கண்ட யான் வேறொருவரையும் நினையாது நின்னையே நினைந்தேன். என்பார், நினைஇ நிற்படர்ந்திசினேஎன்றார். நற்போர்க் குமண வென்றது, தன் பசி நோயைப் போக்குதற்கு இன்றியமையான் என்பது சுட்டி நின்றது. வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோய்என்றது, என போலும் புலவர் வறுமை தீர்ப்பதும் நினக்குக் கடனா மென்பதாம். எனவே, யான் நின்னை வளைத்துக்கொண்டு போதற் குரிமையு முண்டென்று கூறுவார், தொடுத்துங் கொள்ளாதமையலென்என்றார்.
165. குமணன்
காடு பற்றியிருக்கும் தன்பால் வந்து தம் வறுமைத் துன்பத்தை யெடுத்தோதிப் பாடிய பெருந்தலைச் சாத்தனாரது பாட்டின் கருத்தையும் அவர் உள்ளத் தமைதியையும் ஓர்ந்துணர்ந்தான் குமணன். தன்பாற் பொருளில்லையாயினும், தன்னுடல் சிறந்த பொருளாதலையும் அதன்கண் தலை சிறந்த வுறுப்பாதலையும், அதனைக்கொண்டு காட்டினால் தன் தம்பியாகிய இளங் குமணன், மிக்க பொருள் தருவதாய் நாட்டு மக்கட்குத் தெரிவித்திருத்தலையும் நினைந்து, தன் தலையைக் கொய்து கொண்டு சென்று வேண்டும் பொருள் பெற்று வறுமைத் துயரைப் போக்கிக்கொள்க வென்று தன் வாளை யெடுத்துக் குமணன் பெருந்தலைச் சாத்தனார் கையில் தந்தான். கைந்நடுங்க, உளம் பதைக்க, அதை வாங்கிய சாத்தனார், காற்றினும் கடிதாய் இளங் குமணன்பால் சென்று, யான் நின் முன்னோனைக் கண்டு பாடி நின்றேன்; அவன், யான் பொருளின்றி வறிதே வாடிச் செல்வது, நாடிழந்த தன் துயரினும் பெரிதாம் என நினைந்து, வேறு தன்பால் சிறந்த பொருள் இல்லாமையால் தன் தலையை யரிந்து கொள்ளுமாறு தன் வாளைத் தந்துளான்; யானும் அது பெற்றுப் பேருவகையுடன் வருகிறேன்என்றுரைத்து, வாளையும் நன்கு காணச் செய்து, இவ்வுலகத்தில் நிலைபேறு கருதினோர் தம் புகழ் நட்டு உயிர் மாய்ந்தனர்; பிற செல்வர்கள், வறுமையால் தம்மை இரந்தோர்க்கு ஒன்றும் கொடாது இறந்து, தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இவ்வுலகத்தோடு தொடர்பின்றி மறைந்து போயினர்காண்எனத் தெருட்டினர். இதனை இப்பாட்டின்கட் காண்க. இதைக்கண்டு நல்லுணர்வு பெற்ற இளங்குமணன் தன் முன்னோனை நாடி யடைந்து தன் தவற்றுக்கு வருந்தி அவனை நாட்டில் இருத்தி அவன்வழி நின்று ஒழுகும் நற்செயலால் இன்புற்றான்; நாடு முற்றும் நலம் பெருகிற்று.
| மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்வர் இன்மையி னிரப்போர்க் கீஇ யாமையிற் | 5 | றொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே |
|