பக்கம் எண் :

358

 

எம்மூரிடத்து உண்டும் தின்றும் ஊர்ந்தும் இவ்வாறு
செய்து நீ தந்த பரிசில் கொண்டு கொண்டாடுவேமாகச் செல்வேன்;
நீதானும் இமயம்போல நிலைபெறுவாயாக வென முடிக்க.

     நன்றாய்ந்த ஒரு முதுநூ லெனவும், கற்பையும் நுதலையும்
அல்குலையும் சொல்லையும் கூந்தலையுமுடைய துணைவியர் வலைசூடித்
தொழில் கேட்ப வெனவும், செல்லாது நிலீஇய ரெனவும் இயையும். மூவேழ்
துறையு மென்பதற்கு இருபத்தொரு கூறுபட்ட அருத்த நூலென்பாருமுளர்.
விருந் தென்றது அதிதிகளை; அன்றி, உறுப்புத் தோல் முதலியவற்றால்
புதுமையுற்ற வெனினு மமையும். தில்: விழைவின்கண் வந்தது. காவிரி
பரக்கும் என்பதூஉம் பாடம்.

     விளக்கம்: பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயன்
செய்த வேள்வி விருந்தில் வேளாளராகிய ஆவூர் மூலங்கிழாரும்
பேணப்படுவது இதனால் விளங்குதலின், வேள்விக் காலங்களிலும் பண்டை
நாளில் சாதி வேறுபாடு பார்ப்பனரால் மேற்கொள்ளப்படவில்லை யென்று
தெளியத் தெரிகிறது. வைதிக நெறியை வற்புறுத்தும் சைமினியின் கொள்கை
சங்க காலத்தே தமிழகத்தில் பரவியிருந்தமை இப்பாட்டாலும்
அறியப்படுகிறது. வேதநூல் உலகிய லொழுக்கத்திற்குரிய அறத்தையே
வற்புறுத்துவ தென்பவாகலின், ஒன்ற புரிந்த என்றதற்கு “அறமொன்றையே
மேவிய”என உரை கூறினார்; “உலகியல் வேதநூ லொழுக்க மென்பது”
(திருஞான.820) என்று சேக்கிழார் கூறுவது காண்க. இகல் கண்டோர் - வேத
நூலை மேற்கொள்ளாது மாறுபட்டவர். அவர்களைப் புத்தர் முதலாயினாரென
உரைகாரர் கூறுகின்றார். சங்கத்தொகை நூல்களில் புத்தர் சமணர் முதலிய
சமயத்தவரைப்பற்றிய குறப்புக்கள் இன்மையின், இது பொருந்தாமை
யுணரப்படும். வேள்விகள் வகையால் மூன்றும், ஒவ்வொன்றும், எவ்
வேழாய் விரிதலின் விரியால் இருபத்தொன்று மாதலின், “மூவேழ்
துறை”யென்றார்; வகை மூன்றும், சோம யக்ஞம், அவிர் யக்ஞம், பாக
யக்ஞம், என்பனவாம். வேள்வி செய்யுமிடத்து, வேள்வித் தலைவன்
மனைவியர் அணியும் ஒருவகையுடைக்குச் சாலகம் என்று பெயர் என்பர்.
வைதிகர் பல மகளிரை மனைவியராக மணக்கலாம் என்பது விதி. சில
யாங்கங்கட்குப் பத்தினிகள் மூவருக்குக் குறையாதிருக்க வேண்டுமென்னும்
விதயுண்டென திரு. உ. வே. சாமிநாதையர் குறிக்கின்றார். நூற்றுறையில்
இகல் கண்டோர் மிகல் சாய்த்தான் என விண்ணந்தாயனைக் கூறலின்,
மூவேழ் துறை யென்றதற்கு, “இருபத்தொரு கூறுபட்ட தருக்க நூல்”என்று
கொள்ளல் அமையுமென உரைகாரர் குறிப்பதும் அமைவதாம். வேள்வி
முதலிய செயல்கள் வட வாரிய  முறையில் நடைபெறுதலின், அதற்
கேற்பவே அவனை, “இமயம்போல நிலீஇய”ரென வாழ்த்தினார்.