| 167. ஏனாதி திருக்கிள்ளி திருக்கிள்ளி யென்பான், சோழநாட்டுக் குறுநில மன்னருள் ஒருவன்; சோழ வேந்தர்க்குப் படைத்துணையாய்ப் பல போர்களைச் செய்து மேம்பட்டவன்; பகைவர் படைக்கலங்களாற் புண்பட்ட மேனியும், பகைவர் புறங் காண்டலாலும் இரவலர்க்கு வரையாது வழங்கலாலும் இசைபெற்ற நல்வாழ்வும் உடையன். ஏனாதி யென்பது முடிவேந்தர்களால் கொடுக்கப்படும் சிறப்புப் பெயர். இவன் காலத்தே, சோழவேந்தன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியும் சேரமான் குட்டுவன் கோதையும் சிறப்புற்றிருந்தனர். குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் வாழ்ந்தானாயினும், ஏனை யிருவரையும் போல அத்துணைச் சிறப்பில னாயினன். சோழ வேந்தற்குப் படைத்துணைவனாக இத் திருக்கிள்ளியோடு சோழிய வேனாதி திருக்குட்டுவனும் விளங்கினான்.
அக்காலத்தே கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனாரென்னும் சான்றோர் இத் திருக்கிள்ளியின் வண்மையும் நல்லிசையும் கேள்வியுற்று இவன்பால் வந்து சேர்ந்தார். திருக்கிள்ளியும் அவரை யன்புடன் வரவேற்றுச் சிறப்பித்தான். மதுரைக் குமரனார் திருக்கிள்ளியின் மேனி முற்றும் வாள் வடுவுற்று அவனது போர்த்திறத்தை வெளிப்படுத்தும் நலத்தை வியந்து பழிப்பது போலப் புகழ்ந்து ஒரு பாட்டினைப் பாடினர். அதன்கண், திருக்கிள்ளியையும் அவன் பகைவரையும் ஒப்ப நிறுத்தி, நீ வடுப் பொருந்திய யாக்கையை யுடையனாதலின் கண்ணுக்கு இனிய னல்லை; புகழுடைமையால் கேட்டற் கினியை; நின்பகைவரோ போர்க்கஞ்சி ஒடுங்கி வாழ்வதனால் மெய் சிறிதும் வடுவுறாது கேட்டற்கு இனியரல்லராயினும் காண்டற்கு இனியராயுள்ளனர். இருவீரிடத்தும் இனிமையும் இன்னாமையும் இருப்பவும் அறிவுடைய உலகம் உன்னையே வியந்து கூறுகிறதே! காரணம் என்னையோ?என்று வினவுவார் போலக் குறித்துப் பாடியுள்ளார்.
| நீயே, அமர்காணி னமர்கடந்தவர் படைவிலக்கி யெதிர்நிற்றலின் வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக் கினியை கட்கின் னாயே | 5 | அவரே, நிற்காணிற் புறங்கொடுத்தலின் | | ஊறறியா மெய்யாக்கையொடு கண்ணுக் கினியர் செவிக்கின் னாரே அதனா, னீயுமொன் றினியை யவருமொன் றினியர் ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க் | 10 | கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி | | நின்னை வியக்குமிவ் வுலகமஃ தென்னோ பெரும வுரைத்திசி னெமக்கே. (167) |
திணை: அது. துறை: அரசவாகை. ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது. |