| பண்ணன் சிறு குடிக்கு வடக்கே கான்யாறும் தண்ணீர்க் கயமும் இருந்தன. அவையும் சான்றோர்களால் குறிக்கப்பட்டுள்ளன.
சோழ வேந்தனான குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நோக்க, சிறுகுடி கிழான் பண்ணன் எளியனாயினும், அவ்வளவன் இப்பண்ணனிடம் கொண்டிருந்த அன்புறு நட்புப் பண்ணனை ஓர் இனிய தமிழ்ப் பாட்டால் பெரிதும் பாடிப் பரவச் செய்துள்ளது. இனையர் இவர் எமக்கு இன்னம்யா மென்று, புனையினும் புல்லென்னும் நட்பு (குறள்.790) என்பதை நன்குணர்ந்தவனாகலின், இச் சிறுகுடி கிழானான பண்ணன் தன்பொருட்டு மாற்றோருடைய மலைபோலும் யானைகளைப் போரிற் கொன்று சிறந்த மறப் பண்பினையோ, தன்பாற் கொண்ட அன்பினையோ எடுத் தோதாது, அவனது கொடை நலத்தையே விதந்தோதுமாற்றால் தன் உள்ளன்பினை வெளிப்படுத்தக் கருதி இப்பாட்டினைப் பாடினான். பாடியவன் அதனையும் தன் கூற்றாகக் கூறாது பாணனொருவன் கூற்றில் வைத்துப் பாடியுள்ளான்.
இதன்கண், பண்ணன்பால் பரிசில் பெறப் போகின்ற பாணனொருவன், சிறுகுடியை யணுகிய அளவில், பண்ணன்பால் பரிசில் பெற்று வரும் பாணர் சிலரைக் காண்கின்றான். அவர்கள் பண்ணனை வாழ்த்திக் கொண்டு வருகின்றனர். அவர்களை ஒன்று வினாவக் கருதி, யான் வாழும் நாளும் பண்ணன் வாழ்வானாகஎன்று வாழ்த்திப், பரிசில் பெற்ற பாணர்களே, இப் பாணனது சுற்றம் எய்தி வருந்தும் வருத்தத்தைக் காண்மின்; பண்ணன் மனையிலுண்டாகும் ஊணொலி யரவமும் கேட்கிறது; எறும் பொழுக்குப் போல இளஞ்சிறார்கள் சோறுடைக் கையராய் வேறு வேறாகப் போவதையும் காண்கின்றோம்; இவற்றைக் கேட்டும் கண்டும் அமையாது கடும்பினது வருத்தம் மிகுதலால், பசிப்பிணி மருத்துவனாகிய பண்ணனது இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் எனப் பலகாலும் கேட்கின்றோம்; எங்கட்குச் சொல்லுங்கள்என்று கேட்கின்றான்.
| யான்வாழு நாளும் பண்ணன் வாழிய பாணர் காண்கிவன் கடும்பின திடும்பை யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன ஊணொலி யரவந் தானுங் கேட்கும் | 5 | பொய்யா வெழிலி பெய்விட நோக்கி | | முட்டை கொண்டு வற்புலஞ் சேரும் சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச் சோறுடைக் கையர் வீறுவீ றியங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும் | 10 | மற்று மற்றும் வினவுதுந் தெற்றெனப் | | பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே. (173) |
திணையும் துறையு மவை. சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது. |