| உரை: யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய - யான் உயிர் வாழும் நாளையும் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக; பாணர் பாணரே; காண்க இவன் கடும்பினது இடும்பை - காண்பீராக இந்தப் பரிசிலனது சுற்றத்தினது வறுமையை; யாணர்ப் பழு மரம் - புது வருவாயை யுடைத்தாகிய பழுத்த மரத்தின் கண்ணே; புள் இமிழ்ந் தன்ன - புள்ளினம் ஒலித்தாற் போன்ற; ஊன் ஒலி அரவந்தானும் கேட்கும் - ஊணாலுண்டாகிய ஆரவாரந்தானும் கேட்கும்; பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி - காலந்தப்பாத மழை பெய்யுங் காலத்தைப் பார்த்து; முட்டை கொண்டு வற்புலம் சேரும் - தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தினை யடையும்; சிறு நுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்ப - மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய ஒழுக்கத்தை யொப்ப; சோறுடைக்கையர் - சோறுடைக்கையினராய்; வீறு வீறு இயங்கும் - வேறு வேறு போகின்ற; இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் - பெரிய சுற்றத்தாரோடும் கூடிய பிள்ளைகளைக்காண்பேம்; கண்டும் மற்றும் மற்றும் வினவுதும் - கண்டு வைத்தும் எம் பசி வருத்தத்தானும் வழி வரல் வருத்தத்தானும் பின்னரும் பின்னரும் விதுப்புற்றுக் கேளாநின்றேம்; தெற்றென - தெளிய; பசிப்பிணி மருத்துவன் இல்லம் - பசி நோய் தீர்க்கும் மரு்துதுவனது மனை; அணித்தோ சேய்த்தோ - அணித்தோ தூரிதோ; எமக்குக் கூறுமின் - எங்களுக்கு நீர் சொல்லுமின் எ-று.
காண்க இவனென்பது, காண்கிவ னெனக் கடைக்குறைந்து நின்றது. தானென்பது அசைநிலை. இது பரிசில் பெறப்போகின்றான் வருகின்றவரைக் கண்டு வினவுவான் பண்ணனது இயல்புகூறி வாழ்த்தியவாறு. இனி, பரிசிலன் தான், அரவமும் கேட்கும்; சிறாரைக் காண்டும்; கண்டும் மற்றும் மற்றும் வினவுதும்; நீர் எமக்குப் பசிப்பிணி மருத்தவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் என்னாநின்றான்; இவன் கடும்பினது இடும்பையைப் பாணர் காண்க; இங்ஙனம் எம்போலும் இரவலர் வறுமையைத் தீர்க்கின்ற பண்ணன் வாழிய வென்று பெறப் போகின்றானைக் கண்டு பெற்று வருகின்றான் பக்கப் பாணரை நோக்கிக் கூறியதாக வுரைப்பினு மமையும். இதற்கு என்னா நின்றானென ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது.
அன்றியும், பரிசிற்குச் செல்கின்றான், பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்தோ சேய்த்தோ வென்று பலகாலும் வினவ, அதனை யுட்கொண்டு ஊணொலி யரவமும் கேட்கும்; இருங்கிளைச் சிறார்க் காண்டும்; கண்டும் மற்றும் மற்றும் வினவுது மெனச் சாதியொருமையா லுளப்படுத்திக் கூறிப் பின்பு, இங்ஙனம் காணவும் கேட்கவும் படுவது நுமக்கு ஏற அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கென்று அவரை நோக்கி கூறிப், பின்பு இங்ஙனம் என் வறுமையும் தீர்த்து, இவன் வறுமையும் தீர்க்க விருக்கின்ற பண்ணன் யான் வாழும் நாளும்பெற்று வாழ்வானாக வெனப் பரிசில் பெற்று வருகின்றான் தன் பக்கப் பாணரை நோக்கிக் கூறியவாறாக வுரைப்பாரு முளர். இனி, செல்கின்ற பக்கப் பாணருள் ஒருவன் ஆண்டு நிற்கின்ற பாணன் பக்கப்பாணரை நோக்கிக் கூறியதாக வுரைப்பாரு முளர். |