| குறையுடைய யல்லை வாழ்வாயாக; பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர் - பாரியது பறம்பின்கண் குளிர்ச்சியையுடைய சுனையிடத்துத் தெளிந்த நீர்; ஓரூர் உண்மையின் - போய்த் தேடிக்கொள்ள வேண்டாமல் ஓரூரின் கண்ணே யுண்டாதலின்; இகந்தோர் போல - அதனை யாம் வேண்டியபொழுது உண்கின்றோமென்று நெகிழ்ந்திருந்தாரை யொப்ப; காணாது கழிந்த வைகல் - அவனைக் காணாதொழிந்த நாட்கள்; காணா வழி நாட்கு இரங்கும் - எனக்கு நாட்களாய்க் கழிந்தனவல்லவென்று உட்கொண்டு அவனொடு தொடர்ந்த நட்பு இன்றேபோல இடையறாது செல்ல வேண்டுமென்று பின்வருநாளைக்கு இரங்கா நின்றது; என் நெஞ்சம் - என்னுடைய நெஞ்சம்; அவன் கழி மென் சாயல் - அவனது மிக்க மெல்லியசாயலைக் காணுந்தோறும் நினைந்து எ-று.
என் நெஞ்சம் அவன் சாயலைக் காணுந்தோறும் நினைந்து வழிநாட்கிரங்கும்; என்னைப் புணர்ந்த விதியே, நீ நல்லியக்கோடனை யுடையை யாதலால், நீ என்ன குறையையுடைய; நீ வாழ்வாயாக வெனக் கூட்டி வினை முடிவு செய்க.
இல்லோர் சொன்மலையென்பதற்கு இல்லோர் சொல்லைச் சூடுமென்றும், எற்புணர்ந்த பாலேஎன்றோதி, என்னை அவனொடு கூட்டிய விதியே யென்றும், வழிநாட் கிரங்கும்என்பதற்கு, இன்னும் இவனொடு தொடர்ந்த நட்பு இடையற்றுக் கழியுங் கொல் என்று இரங்குமென்றும் உரைப்பாரு முளர்.
விளக்கம்: ஓரை, விளையாட்டு. விளையாட்டு மகளிர் சேற்றைக் கிளறியவழி, யாமை முட்டையும் ஆம்பற்கிழங்கும் தாமே வெளிப்படப் பெறுவர் என்றது, ஓய்மானாட்டவர் பெருமுயற்சியின்றியே அரிய பொருள்களைப் பெறும் நல்வளமுடைய ரென்றவாறு. யாமை தன் முட்டையைமறைவிடத்தே யீன்று புதைத்து விடுமென்றும், அம்முட்டை வட்டுப்போ லிருக்குமென்றும் கூறுப. வாய்த்தலைகளில் கதவமைத்து நீரை அளவறிந்து செலவிடுபவாதலின், விட்டவழிப் பெருகிவரும் நீரினது முழக்கத்தை விதந்த, இழுமென வொலிக்கும் புனலம் புதவுஎன்றார். பிறரும், புனலம் புதலின் மிழலை (புறம்.24) என்பது காண்க. நல்லியக் கோடனை யுடையையென்று ஊழினைப் பாராட்டிக் கூறியது, அவனால் வேண்டுவனற்றைக் குறைவறப் பெறுமாறு விளக்குதலின், நல்லியக் கோடனை யுடையையாகலான்,நீ ஒரு குறையை யுடையையல்லையென்றார். பாரி பறம்பிலுள்ள சுனைநீர் மிக்க தட்பமும் சுவையும் பெறற்கருமையு முடையதாகலின் சான்றோரால் கைவண் பாரி தீம்பெரும் பைஞ்சுனை(அகம்.78) என்றும், பாரி பறம் பிற்பனிச்சுனைத் தெண்ணீர்(குறுந்.196) என்றும் பாராட்டப்படும். உள்ளூரிற் பெறப்படும் அரிய பொருள் ஒருவர்க்கு அரிதாகாது மிக எளிதாய்க் கருதப்படுவதுபற்றி, ஒரூ ருண்மையின் இகந்தோர் போலஎன்றார். காணும் நாளில் நல்லியக் கோடனது சாயலின் நலனைக் கண்டு கண்டு இதனைப் பெறாது பல நாட்கள் வீணே கழிந்தனவே என்றும், |