| அம்பறாத்தூணி பொருந்திய முதுகை யுடையையாய்; தேர் மிசை - தேர்மேலே நின்று; சாப நோன் ஞாண் வடுக்கொள வழங்கவும் - வில்லினது வலிய நாணாற் பிறந்த வடுப் பொருந்தும்படி அம்பைச் செலுத்தவும்; பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் - பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகலங்களை யளிக்கவும்; குரிசில் - தலைவ; வலிய வாகும் நின் தாள் தோய் தடக்கை - வலியவாகும் நின் முழந்தாளைப் பொருந்திய பெரிய கைகள்; புலவு நாற்றத்த பைந்தடி - புலால் நாற்றத்தை யுடையவாகிய செவ்வித் தடியை; பூ நாற்றத்த புகை கொளீஇ - பூ நாற்றத்தவாகிய புகையைக் கொளுத்தி; ஊன் துவை கறி சோறு உண்டு - அமைந்த வூனையும் துவையையும் கறியையும் சோற்றையும் உண்டு;வருந்து தொழில் அல்லது - வருந்தும் செயலல்லது; பிறிது தொழில் அறியா ஆகலின் - வேறு செயலறியா வாகலான்; தாம் நன்றும் மெல்லிய - அவைதாம் பெரிதும் மெல்லியவாயின; பெரும-; நல்லவர்க்கு ஆரணங்காகிய மார்பின் - பெண்டிர்கட்கு ஆற்றுதற்கரிய வருத்தமாகிய மார்பினையும்; பொருநர்க்கு இருநிலத்தன்ன நோன்மை - பொருவார்க்குத் துளக்கப்படாமையிற் பெரிய நிலம்போன்ற வலியினையுமுடைய; செரு மிகு சேஎய் - போரின் கண்ணே மிக்க சேயை யொப்பாய்; நிற் பாடுநர் கை - நின்னைப் பாடுவாருடைய கைகள் எ-று.
கொளீஇ யென்னு மெச்சம் அமைத்த வென்னும் ஒருசொல் வருவித்து முடிக்கப்பட்டது; கொளுத்த வெனத் திரித்து அவ்வூன் என ஒரு சுட்டு வருவித்து அதனொடு முடிப்பினு மமையும். உண்டென்பது பொதுவினை யன்றேனும் கறி யொழிந்தவற்றிற்கெல்லாம் சேறலின். பன்மைபற்றி அமைத்துக்கொள்ளப்படும். ஊன் துவை கறியொடு கூடிய சோற்றை உண்டென வுரைப்பினு மமையும். இதனைப் பொது வினை யென்றுரைப்பாரு முளர்.
குரிசில், பெரும, சேஎய், வலியவாகும் நின் கை; நிற்பாடுநர் கை தாம் மெல்லியவாகும் எனக் கூட்டுக.
இனி, மாதாங்கவும் என்பதற்கு அகழியைக் கடக்கப் பாய்தற்குக் குதிரைக் குசையைத் தாங்கியெடுத்து விடவும் என்றுரைப்பாரு முளர். பாடுநரெனத் தம்மைப் படர்க்கையாகக் கூறினார். தம் கையின் மென்மையது இயல்பு கூறுவார், அரசன் கையின் வலி இயல்புங் கூறினமையான், இஃது இயன்மொழியாயிற்று.
விளக்கம்: கடுங்கண் - வன்கண்மை. எழு-கணைய மரம். பொன் - இரும்பு. சமம்- வேண்டும் அளவு. பார் நிலத்தை யுடைத்தற்குக் கருவியாகலின், குந்தாலியாலென வருவித்துரைத்தார். குறிப்பதன் பயன், அந்நீரழுவத்துட் செல்லாமையாதலால், குறித்து என்பதற்குக் கருதிய தன்கண் செல்லாதபடி யென்று உரை கூறுகின்றார். குசை - சாட்டி; |