பக்கம் எண் :

40

    

பிடிவாருமாம். புறம் - முதுகு. சாபம் - வில். அருங்  கலம்  என்பதில்
அருமை, பெறலருமை. பரிசிலர்கட்குப் பெறுதற்கரியது என்பது. செவ்வித்
தடி - புதிய வூன்கறி. பூநாற்றம் - தாளிதத்தாற் பெற்ற இனிய மணம்.
கொளீஇ  யென்னும் வினையெச்சம் கிடந்தபடியே எவ்வினையோடும்
இயையாமையால், அமைத்த என ஒருசொல் வருவித்து முடிக்கப்பட்டது
என்றார்.  இனி,  அவ்வினையெச்சத்தையே  பெயரெச்சமாகத்  திரித்து
அதற்கேற்ப முடித்தாலும் அமையும் என்று கூறுகிறார்.வினையெச்சத்தைப்
பெயரெச்சமாகத்  திரித்து  வேண்டியவாறு  முடிப்பது  அத்துணைச்
சிறப்புடையதன்றாதலால், அமைத்தவென ஒருசொல் வருவித்துரைப்
பதையே மேற்கொள்கின்றார். ஊனுண்டல் துவையுண்டல், சோறுண்டல்
என்றாற்போலக் கறியுண்டலென வாராது கறிதின்றல் என வருமாதலால்,
“கறியொழிந்தவற்றிற் கெல்லாம் சேறலின் பன்மைபற்றி அமைத்துக்
கொள்ளப்படும்” என்றார். சேனாவரையர் முதலியோர் உண்டலென்பது
பொதுவினை யென்பர்.

     “நும் கை மெல்லியவால்” என்ற சேரமான் வாழியாதனுக்கு, கபிலர்
தம் கையின் மென்மைக்குக் காரணம் கூறுமாற்றால் “என் கை” யென்று
கூறாமல், “பாடுநர் கை” யென்றது, தன்னைப் படர்க்கை யாகக் கூறுவது.
நும் கை மெல்லிது என்றதுவே வாயிலாக வேந்தனது கை வன்மையும்
கை வண்மையும் ஒருங்கு பாடுதற்கு இடம் வாய்த்தமையின், அதனை
விடாது அரசன் கையின் இயல்பு கூறினார்.

      எம் கை  உண்டு  வருந்து தொழில் அல்லது பிறிது தொழிலறியா
வென்றது, வேந்தன் கையின் பெருமையை விளக்கிற்று.ஆடவர் மார்பகலம்
மகளிர்க்குப் பொறுத்தற்கரிய வேட்கைத் துன்பம் பயக்குமென்ப வாதலால்,
“மகளிர்க்கு ஆரணங்காகிய  மார்பு” என்றார்; “மணங்கமழ் வியன்மார்
பணங்கிய செல்லல்”  (அகம்.22)  என்று  பிறரும்  கூறுப.  போரின்கண்
உயர்வற வுயர்ந்த ஒருவன் முருகனென்பது  தமிழ்  நாட்டு வழக்காதலின்,
போரில்   மேம்படுவோரை   முருகனோ   டுவமை  கூறிச் சிறப்பிப்பது
வழக்காயிற்று.  அதனால்,  சேரமானை,  “செருமிகு  சேஎய்”  என்றார்.
நிலத்தோடு வேந்தனை  யுவமித்தது.   பொறைபற்றியன்று;  துளக்கப்
படாமைபற்றி யாதலால், அதனைப் பெய்து உரை கூறுகின்றார்.

15. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

     இப் பாட்டின்கண் ஆசிரியர் நெட்டிமையார், பாண்டியன் முதுகுடுமிப்
பெருவழுதியின்  போர்  மிகுதியும்,  வேள்வி  மிகுதியும்  கண்டு வியந்து,
“பெரும,  மைந்தினையுடையாய்,  பகைவருடைய  நல்லெயில்  சூழ்ந்த
அகலிடங்களைக்  கழுதை   யேர்  பூட்டி  யுழுது பாழ்செய்தனை; அவர்
தேயத்து  விளைவயல்களில்  தேர்களைச்  செலுத்தி  யழித்தனை; நீருண்
கயங்களில்  களிறுகளை  நீராட்டிக்  கலக்கி யழித்தனை, இவ்வாறு மிக்க
சீற்றமுடை  யோனாகிய  நின்னுடைய  தூசிப்படையைக் கொள்ளவேண்டி
வந்து   பொருது வசையுற்ற வேந்தரோ பலர்; நால்வேதத்துக் கூறியவாறு
வேள்வி  பல   செய்து   முடித்து அவ்  வேள்விச்  சாலைகளில் நட்ட
யூபங்களும் பல; வசையுற்றவர் தொகையோ, யூபங்களின் தொகையோ,
இவற்றுள் மிக்க தொகை யாது?” என்று கேட்கின்றார்.