| சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் ஆகிய முடிவேந்தரைப் பாடிப் பெரும் பரிசில் பெற்ற கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார், இவனையும் இப்பாட்டிற் பாடியுள்ளாரெனின், இவன் கொடுக்கும் கொடைப் பொருளினும் கொடுத்தற் கமைந்த குணநலமே, பண்டை நல்லிசைச் சான்றோர் இவன்பால் வருவித்துப் பாடச் செய்ததென்பது தெற்றெனத் தெளியற்பாற்று.இவனைப் பாடி இவன் தந்த பரிசிலைப் பெற்று இன்புற்ற குமரனார், இப்பாட்டின் கண்ணே பரிசில் பெற்ற பாணனொருவன்,பெறாமையால் கொடுப்பாரை யறியும் வேட்கையனாய் வரும் வேறொரு பாணனுக்குக் கூறுவானாய், பாண்பசிபபகைஞன் ஒருவன் ஈர்ந்தையில் உள்ளான்; அவன் நிரம்பக் கொடுக்கும் அத்துணைச் செல்வமுடைய னல்லனாயினும், இல்லையென மறுக்கும் சிறுமையுடையனல்லன்; போரிற் புண்பட்டு வடு நிறைந்த யாக்கை யுடையவன்; நினக்கு வறுமை கெட விருப்பமாயின், எம்மொடு வருக; யாம் சென்று அவனை இரப்போமாயின், அவன் தன்னூர்க் கொல்லனை வருவித்து, அவற்கு நம் உண்ணா வயிற்றினைக் காட்டி, உடனே வேல் வடித்துக் கொடு; யான் சென்று போருடற்றிப் பொருள் கொணர்ந்து, இவர்தம் பசி தீர்த்தல் வேண்டும் என்று சொல்லி யிரப்பான்என்று பாடியுள்ளார்.
| நிரப்பாது கொடுக்குஞ் செல்வமு மிலனே இல்லென மறுக்குஞ் சிறுமையு மிலனே இறையுறு விழுமந் தாங்கி யமரகத் திரும்புசுவைக் கொண்ட விழுப்பு ணோய்தீர்ந்து | 5 | மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி | | வடுவின்று வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந் தீர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன் இன்மை தீர வேண்டி னெம்மொடு நீயும் வம்மோ முதுவா யிரவல | 10 | யாந்தன் னிரங்குங் காலைத் தானெம் | | உண்ணா மருங்குல் காட்டித் தன்னூர்க் கருங்கைக் கொல்லனை யிரக்கும் திருந்திலை நெடுவேல் வடித்திசி னெனவே. (180) |
திணையுந் துறையு மவை. துறை: பாணாற்றுப் படையுமாம். ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
உரை: நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலன் - நாடோறும் தொடர்ந்து கொடுக்கும் செல்வமும் உடையானல்லன்; இல்லென மறுக்கும் சிறுமையும் இலன் - இங்ஙனம் வறிஞனாயினும் இரந்தோர்க்கு இல்லையெனச் சொல்லி மறுக்கும் புன்மையு முடையனல்லன்; இறையுறு விழுமம் தாங்கி - தன் அரசுக்கு வந்துற்ற போரானமைந்த இடும்பைகளைத் தான் பொறுத்து; |