பக்கம் எண் :

413

 

அன்று அவண் உண்ணதாகி - அன்று அவ்விடத்து உண்ணாதாகி;
வழி நாள் பெரு மலை விட ரகம் புலம்ப - பிற்றைநாள் பெரிய
மலையின் கண் தனது முழையிடம் தனிமைப்பட; வேட்டெழுந்து -
உணவை விரும்பி யெழுந்து; இருங் களிற்று ஒருத்தல் நல் வலம்
படுக்கும் - பெரிய களிறாகிய ஒருத்தலை நல்ல வலப்பக்கத்தே
படப்படுக்கும்; புலி பசித் தன்ன - புலி பசித்தாற்போலும்; மெலிவில்
உள்ளத்து உரனுடையாளர் கேண்மையொடு - குறையில்லாத
மேற்கோளையுடைய வலியையுடையோர் நட்போடு; இயைந்த
வைகல் உளவாகியர் - பொருந்திய நாட்கள் உளவாகுக எ-று.

    சீறிட மென்றது, விளைந்து முற்றியபின் அறுப்பதற்கு முன்னாகிய
இடத்தை இல்லாகியர், உளவாகியர் என்பன ஈண்டு வியங்கோட்
பொருளவாய் நின்றன.

     விளக்கம்: விளைந்து முற்றியபின் அறுப்பதற்கு முன்னாகிய இடம்,
அறுத்த சின்னாட்களில் மறுபடியும் உழப்பட்டு மாறிவிடுதல் பற்றி, “சீறிடம்”
எனப்பட்ட தென்றார். தன் அளை நிறைய வைத்துக் கொண்ட தாயினும்,
அதற்கென்று உழைத்தவர் வேறாக, அவர துழைப்பின் பயனாக வந்த
விளைவைத் தான் கவர்ந்து கோடலின், “சிறிய முயற்சி”யென்றார். உள்ள
மிகுதி - உள்ளத்தின் உயர்வு; “மாந்தர்தம் உள்ளத்தனைய துயர்வு”
(குறள்.595) என்பது காண்க. உள்ளத்தில் மெலிவு இல்வழி, உயர்வும்
அதனைச் செயற்படுத்தற்குரிய திண்மையும் ஒருங்குண்டாதலின், “மெலிவில்
உள்ளத் துரனுடையாளர்”என்றார். புலி இடம் வீழ்ந்த துண்ணாது
என்பதைப் பிற சான்றோரும், “தொடங்கு வினை தவிரா வசைவி
னோன்றாள் கிடந்துயிர் மறுகுவ தாயினு மிடம் படின், வீழ்களிறு மிசையாப்
புலி”(அகம்.29) என்று கூறுதல் காண்க.

191. பிசிராந்தையார்

     பிசிராந்தையார் தமதூராகிய பிசிரில் இருக்கையில் உறையூரிலிருந்து
அரசுபுரிந்த கோப்பெருஞ் சோழனுடைய குணநலங்களைக் கேள்வியுற்று
அவனைக் காண்டல் வேட்கை மிக்கிருந்தார். கோப்பெருஞ் சோழனும்
பிசிராந்தையார் நலங்களைக் கேள்வியுற்றுப் பெரு நட்பினைத்
தன்னுள்ளத்தே வளர்க்கலுற்றான். இருவருடைய நட்புணர்ச்சிகள் தாமே
மிக்கு ஒருவரொருவர் தம் பெயரைக் கூறுமிடத்து, தத்தம் நண்பர் பெயரை
இணைத்துக் கூறிக்கொள்ளும் அளவில் சிறந்து நின்றன. கோப்பெருஞ்
சோழன் வடக்கிருக்கப் புக்கபோது சான்றோர் பலர் அவனுடன்
வடக்கிருப்பாராயினர். அக்காலை அவன், பிசிராந்தையாரைக் காண
விழைந்தான். ஒத்த உணர்ச்சியினராதலால் பிசிராந்தையாரும்
கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கப் புக்க தறியாது அனைக் காண்டல்
வேண்டிப் பாண்டியநாட்டை விட்டுப் புறப்பட்டு உறையூர் வந்தார். அவர்
வந்து சேர்தற்குள் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்விட்டானாக,
அவற்கு நடுகல்லும் நாட்டப்பட்டுவிட்டது. பிசிராந்தையார் மனஞ் சோர்ந்து
 
வருந்தினார்.