| தாவ; நின் தெவ்வர் தேஎத்துத் தேர் வழங்கினை -நின்னுடைய பகைவர் தேஎத்துக்கண் தேரைச் செலுத்திணை; துளங்கியலால் பணை யெருத்தின் - அசைந்த தன்மையோடு பெரிய கழுத்தினையும்; பா வடியால் செறல் நோக்கின் - பரந்த அடியோடு வெகுட்சி பொருந்திய பார்வையினையும், ஒளிறு மருப்பின் களிறு - விளங்கிய கோட்டினையுமுடைய களிற்றை; அவர காப்புடைய கயம் படியினை - அப்பகைவருடையனவாகிய காவலையுடைய வாவிக்கட் படிவித்தனை; அன்ன சீற்றத்து அனையை - அப்பெற்றிப்பட்ட சினத்துடனே அதற்கேற்ற செய்கையையுடைய; ஆகலின் - ஆதலான்; விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு -விளங்கிய இரும்பாற் செய்யப்பட்ட ஆணியும் பட்டமும் அறைந்த அழகுமிக்க பலகையுடனே; நிழல்படு நெடுவேல் ஏந்தி - நிழலுண்டாகிய நெடிய வேலை யெடுத்து; ஒன்னார் - பகைவர்; ஒண்படைக் கடுந்தார் - ஒள்ளிய படைக்கலங்களையுடைய நினது விரைந்த தூசிப்படையின்; முன்பு தலைக்கொண்மார் -வலியைக் கெடுத்தல் வேண்டி; நசைதர வந்தோர் - தம் ஆசை கொடுவர வந்தோர்; நசை பிறக்கொழிய - அவ்வாசை பின்னொழிய; வசை பட வாழ்ந்தோர் பலர்கொல் - வசையுண்டாக உயிர் வாழ்ந்தோர் பலரோ?; நற்பனுவல் -குற்றமில்லாத நல்ல தரும நூலினும்; நால் வேதத்து - நால்வகைப்பட்ட வேதத்தினும் சொல்லப்பட்ட; அருஞ்சீர்த்தி - எய்தற்கரிய மிக்க புகழுடைய; பெருங் கண்ணுறை நெய்ம் மலி ஆவுதி பொங்க - சமிதையும் பொரியும் முதலாகிய பெரிய கண்ணுறையோடு நெய் மிக்க புகை மேன்மேற் கிளர; பன்மாண் வீயாச சிறப்பின்-பல மாட்சிமைப்பட்ட கெடாத தலைமையையுடைய; வேள்வி முற்றி - யாகங்களை முடித்து; யூபம் நட்ட வியன்களம் பலகொல்-தூண்நடப்பட்டஅகன்ற வேள் விச்சாலைகள் பலவோ?; யா பலகொல் -இவற்றுள் யாவையோ பல? ; பெரும-; விசி பிணிக் கொண்ட மண்கனை முழவின் - வார் பொருந்தி வலித்துகட்டுதலைப் பொருந்திய மார்ச்சனை செறிந்த தண்ணுமையையுடைய; பாடினி பாடும் வஞ்சிக்கு - விறலி பாடும் மேற்செலவிற்கு ஏற்ப; நாடல் சான்றமைந்தினோய் - ஆராய்தலமைந்த வலிமையுடையோய்; நினக்கு-; எ-று.
பூட்டி யென்னும் வினையெச்சத்திற்கு உழு தென்னுஞ்சொல் தந்துரைக்கப்பட்டது. நற்பனுவல் நால்வேதத்து வேள்வி யென இயையும். நற்பனுவலாகிய நால்வேத மென்பாரு முளர். பெரும, மைந்தினோய், பாழ் செய்தனை, தேர் வழங்கினை, கயம் படியினை; ஆதலின், நினக்கு ஒன்னாராகிய வசைபட வாழ்ந்தோர் பலர் |