| கொல், யூபம் நட்ட வியன் களம் பலகொல்; இவற்றுள் யா பல கொல்லோ வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளங்கு பொன்னெறிந்த வென்பதற்குக் கண்ணாடிதைத்த வெனினுமமையும் தார் முன்பு தலைக் கொண்மார் என்பதற்குத் தாரை வலியால் தலைப்பட வெனினு மமையும். புரையுநற் பனுவலென்பதூஉம் பாடம். யா பலவென இவ்விரண்டின் பெருமையும் கூறியவாறு. இவை எப்பொழுதுஞ் செய்தல் இயல்பெனக் கூறினமையின், இஃது இயன் மொழியாயிற்று.
விளக்கம்: ஞெள்ளல் - தெரு. நன வென்னும் உரிச்சொல் அகல மென்னும் பொருட்டாதலானும், தலையென்பது இடமாதலானும், நனந்தலை யென்றது, அகன்ற இடமெனப் பொருள்படுவதாயிற்று. அகன்ற என்பது அகலிய வென வந்தது. உகளல், தாவுதல்; அஃதாவது ஊன்றிப் பாய்தல். பாவடி - பரப்ப அடி. ஒளிறுதல் - விளங்குதல். பலகை - கிடுகு; கேடகம். வாளும் வேலும் கொண்டு பகைவர் தாக்குமிடத்து, அவற்றைத் தாங்கித் தடுத்து நிற்றற்கேற்ப, ஆணியும் பட்டமும் அறைந்து அழகும் வன்மையும் பொருந்தியிருப்பதனால் இதனை நலங்கிளர் பலகை என்றார். முன்பு - வலி. இதனைத் தலைக்கொள்ளல் என்பது சிதைப்பதாகும்; ஆதலால் தலைக்கொண்மார் என்பதற்குக் கெடுத்தல் வேண்டியென்றார். இனித் தலைக் கொள்ள லென்பது எதிர்தல் என்றும் பொருள்படுதலால், முன்பு தலைக்கொண்மார் என்பதற்கு முன்பால் என ஆலுருபு விரித்து, வலியால் தலைப்பட்ட என்றும் உரைக்கலாம் என்றார். நற்பனுவல் நால்வேதத்தென்பதை, நற்பனுவலும் நால்வேதமும் எனக் கொண்டு, தரும நூலினும் வேதத்தினு மெனவுரைத்தார். நற்பனுவலும் வேதமே யாமெனக் கோடலும் பொருந்துமாகையால் நற்பனுவலாகிய நால்வேத மென்பாருமுளர் என்றார். பொன்னென்னும் பல பொரு ளொருசொல் கண்ணாடிக்குமாதலின், விளங்கு பொன்.....தைத்த வெனினுமமையும் என்று கூறினார். 16. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி இச் சோழன் காலத்தே சேரநாட்டில் சேரமான் மாரி வெண்கோவும், சேரமான் மாந்தரஞ் சேர லிரும்பொறையும், பாண்டிநாட்டில் பாண்டியன் கானப்பேர் எயில் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஆட்சிபுரிந்தனர். இவற்குச் சேரமன்னர் இருவரில் மாரி வெண்கோ நண்பன். ஒரு கால் மாரிவெண்கோவும் உக்கிரப் பெருவழுதியும் இப் பெருநற்கிள்ளியும் நட்பால் பிணிப்புற்று ஒருங்கிருப்ப ஒளவையார் கண்டு பெருமகிழ்வுற்று, வானத்து வயங்கும் மீனினும் மாமழைத் துளியினும் நும்முடைய வாழ்நாட்கள் உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக என வாழ்த்திச் சிறப்பித்தனர். பிறிதொருகால், இந்நற்கிள்ளிக்கும் சேரமான் மாந்தரஞ் சேரலிரும் பொறைக்கும் போருண்டாயிற்று. அக்காலை, சோழற்குத் துணையாய்த் தேர்வண் மலையனென்பான் போந்து இரும்பொறையை வென்று புறங்கண்டான். இக் கிள்ளியை உலோச்சனார் என்னும் சான்றோர் சென்று கண்டபோது அவர்க்கு இவன் மலைபயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், கடல் பயந்த கதிர் முத்தமும், வேறுபட்ட வுடையும் பிறவும்
|