பக்கம் எண் :

431

 

கூடியிருக்கும்  “கடவுள் சான்ற கற்பிற் சேயிழை மடவோ’’ளும்   மிக்க
செல்வமும் விளங்கக் கண்டு இப் பேரிசாத்தனார் பாடுதல் பற்றி, தண்டமிழ்
வரைப்பகத்து, வேந்தரைப் பணிந்து   அவரது நன்கலத்தை நீ கொணர்ந்து
தொகுத்ததுபோல நின் புதல் வரும் ஒன்னார் வாட அருங் கலம் கொணர்ந்து
நின் நெடுநகர்  வைத்துள்ளனர்;  இவ்வகையில் நின்னை யொப்பாராயினும்,
நின்பால் இல்லாமையால், பெரிய  கண்ணோட்டத்தில்  “நின் முன்னோர்
போல்க”என்றார். இனி, நின்பால் பெருங் கண்ணோட்டமில்லாமை, நின்
முன்னோர்பாலும்  இல்லாமையைக்  காட்டுதலின், அவர்போல  இவரும்
இருப்பாராக வென்றா ரெனக் கொண்டு, “நின் முன்னோர்......என்பதாயிற்று”
என  உரைகாரர்   குறிக்கின்றார். நீடு வாழ்கவென வாழ்த்துபவர் யாண்டும்
நாளும்  கடல்  நீரினும்  மணலினும்  மழைத்  துளியினும்  பல சொல்லி
வாழ்த்தியதன் கருத்து இதுவென்றற்கு, “என்னிடத்து நீ செய்த
கொடுமையால் நினக்குத்  தீங்கு  வரும்; அது  வாராதொழிக  வென
வாழ்த்தியதூஉமாம்”என்றார்.  “என்னளவில்   நீ   செய்த செய்தியை
மறவா தொழி”யென்றது, மறந்தால்   நின்னைப் பாடிவரும் ஏனைச்
சான்றோர்களையும்   இவ்வாறு வருத்தி, அவர் நொந்து கூறும்
வசைகளையேற்று  வருந்துவாய் என்றவாறு. கேளாந்  தன்மையுடைய  நீ.
புறக்கணித்தமையால்   யான் “கேளில் சேஎய் நாட்’’டுக்குச்  செல்கின்றேன்
என்றார். ஆங்கிருந்தேனாயினும், நின்னை நினையா  தொழியேனென்பார்,
“எந்நாளும்  துளிநசைப்  புள்ளின் நின் னளிநசைக் கிரங்கி நின் னடிநிழற்
பழகிய அடியுறை”யென்றார். அடிக்கீழ் உறைவாரை அடியுறையென்பது
வழக்கு; அடியார் என்பது போல.


199. பெரும் பதுமனார்

     பெரும்  பதுமனார்   என்னும்   இச்  சான்றோர்,   அகப்பாட்டும்
புறப்பாட்டுமாகிய  பல  பாட்டுக்களைப்  பாடிச் சிறப்புற்றவர். களவிற்
காதலொழுக்கம்  பூண்ட  ஒருவனும்  ஒருத்தியும்  ஒருவரை  யொருவர்
இன்றியமையா  அளவில்   திருமணத்திற்குரிய  முயற்சியில்  ஈடுபட்டனர்.
பெற்றோர் களவொழுக்கத்தை யறியாமையான் வரைவிற்குடன் படாராயினர்.
இற்செறிப்பு  மிக்கதனால்  இருவரும்   உடன்போக்கிற்   றலைப்பட்டனர்;
புறப்பட்டும் வெளிப்போய் விட்டனர்; வழியருமையும் நினைந்திலர்; இடையில்
எய்தக்கூடிய ஊறுகளையும் எண்ணிற்றிவர். காதலியை முன்னே செல்வித்து
காதலன் பின்னே காவல்புரிந்து சென்றான். இரவுப்போதென்றும் எண்ணாது
செல்லும் அவர்களைக் கண்ட இப்பெரும்பதுமனார் காதற்காமப் பிணிப்பின்
வன்மையினை யுணர்ந்து, “வையெயிற் றையள் மடந்தைமுன் னுற்று, எல்லிடை
நீங்கும் இளையோன் உள்ளம், கல்லொடு பட்ட மாரி, மால்வரை மிளிர்க்கும்
உருமினுங் கொடிதே”(நற்.2) யென்றும், இருவர் மனநிலையினையுந் தேர்ந்து,
“வில்லோன் காலன் கழலே தொடியோன் மெல்லடி மேலவும் சிலம்பே
நல்லோர், யார்கொல் அளியர் தாமே”(குறுந். 7) என்றும் பரிந்து
பாடுகின்றனர். மீளிப் பெரும் பதுமனார் என்றொரு சான்றோருளர். இவரைப்
பெரும் பதுமனார் எனப் பொதுவாகவும், அவரை மீளிப் பெரும் பதுமனா
ரெனச் சிறப்பித்தும் சான்றோர் கூறுதலின், இருவரும் ஒருவரல்ல ரென்பது
துணியப்படும்.