| வெளிப்படையாய் நின்றது. தளர்ச்சி யென்பதன்பின் நீங்கவென ஒரு சொல் வந்தது. அருமுன்பிற் பெருந்தளர்ச்சி பலருவப்பப் பிறிது சென்று என்பதற்கு, முன்போலே தளர்ச்சி பிறிதாகப் பலருவப்பச் சென்று எனினுமமையும்; அன்றி முன்பின் தளர்ச்சி பிறிதாகச் சென் றென்றுரைப் பாரு முளர். ஆனாது முழங்கும் முரசு என்க.
விளக்கம்: குண குட கடல் என்றாற்போலக் குமரிக்கண் கடல் கூறப்படாமையால், குமரி கடல்கோட் படுதற்கு முன்னையது இப்பாட்டென்பது தெளிவாகும். தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், இல்லறத்தானாகிய தான் என்ற கூறு ஐந்தொழிய எஞ்சி நிற்கும் ஆறாவது கூறு அரசர்க்காதலின், அதனைப் படுவது என்றார். தடையுண்டாகிய வழி, அரசு இனிது நடவாதென்பதுபற்றி, இனிது உருண்ட என்பதற்குத் தடையின்றாக வுருண்ட என்றார். முழுதாளுதல்- நிலம் முழுதும் ஆளுதல் கோள் தாழை - கோட்புக்க தாழை; குலை தாழ்ந்து மக்கள் ஏறி இனிது கொள்ளத்தக்க வகையில் உயர்ந்த தெங்கு என்றற்குக் கோட்புக்க தெங்கு என வுரைத்தார். நிலாப்போல் வெண்மையான மணலை நிலவு மணல் என்றமையின், நிலாப்போன்ற மணல் என வுரைத்தார். நிலா, நிலவென வந்தது. பயம்பு, பள்ளம். யானை வரும் வழியில் ஆழ்ந்த பள்ளஞ்செய்து அதன்மேல் மெல்லிய கழிகளைப் பரப்பி மணலைக் கொட்டி பொய்யே நிலம் போலத் தோன்றச் செய்து வைப்பர் யானை வேட்டம் பரிவோர். அதனை யறியாது வரும் யானை அப்பள்ளத்தில் வீழ்ந்துவிடும். பின்னர்ப் பழகிய யானைகளைக் கொண்டு அதனைப் பிணித்துக் கொள்வர். இக்கரவினை யறிந்த யானைகள்,செல்லுமிடத்து மிக்க கருத்தோடு செல்லும். ஈண்டு யானை அகப்பட்டமைக்குக் காரணம் மனச்செருக்கா லுண்டாகிய கருத்தின்மை யென்பார், மாப்பயம்பின் பொறை போற்றாது என்றார். மிக முதிர்ந்த களிறென்பது தோன்ற, கோடு முற்றிய கொல் களிறு என்றார். எனவே, இவ்வாறு பல இடையூறுகளைக் கண்டு தேறிய களிறென்பது பெற்றாம். அரு முன்பு, முன்பு-வலி. இதனையுடைமையின் பயன்,பகைக்கஞ்சாமையாதலால்,அரு முன்பின் என்பதற்குபொறுத்தற்கரிய வலியால் பகையை மதியாது என வுரைத்தார். இறைப்புரிசை: இறை - உயர்வு காடு, அகழ் மதில் முதலிய அரண்களின் பன்மை தோன்ற, வீங்கு சிறை என்றார். சிறை, காவல். மலையிடத்தே தேனினம் கூடமைத்தல் இயல்பாதலால், யானைகளின் மதநாற்றங் குறித்துத் தங்கும் தேனினத்தை, மலையெனத் தேனிறை கொள்ளும் யானை யென்றார். வான், மேகம்; வான் பொய்ப்பினும் தான் பொய்யா (பட்டி.5) என்றாற் போல. குன்றுமலை காடு நாடென்றவிடத்துக் குன்றொழிந்த ஏனைய தனித்தனியே குறிஞ்சி, முல்லை, மருதங்களைக் குறித்தலின், குன்றென்பதும் ஒரு நிலப்பகுதி குறித்ததென்றற்கும் இடமுண்மையின், அன்றி......உளர் என்றார். பொருநர், வேந்தர்க்கும், போர்க்களம் ஏர்க்களம் என்ற இருவகைக் களம் பாடுவோர்க்கும் பொதுப்பெயர்.
|