| தலை மயங்கிய தலையாலங் கானத்து - தமிழ்ப் படை கைகலந்த தலையாலங்கானத்துக்கண்; மன்னுயிர்ப் பன்மையும் - நிலைபெற்ற உயிரினது பன்மையையும்; கூற்றத் தொருமையும் - அவ்வுயிரைக் கொள்ளும் கூற்றினது ஒருமையையும்;நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய - நின்னுடனே சீர்தூக்கிக் காட்டிய வென்றி வேலையுடைய செழிய; இரும் புலி வேட்டுவன் பொறி யறிந்து மாட்டிய - பெரும் புலியைப் படுக்கும் வேட்டுவன் எந்திர மறிந்து கொளுத்திய; பெருங்கல் அடாரும் போன்ம் - பெரிய கல்லையுடைய அடாரையும் போலும்; என விரும்பி - என்று விரும்பி; முயங்கினென் அல்லனோ யானே - புல்லினேனல்லனோ யான்; மயங்கிக் குன்றத் திறுத்த குரீஇ யினம் போல - கலங்கி மலைக்கண்ணே தங்கிய குருவியினம் போல; அம்பு சென்று இறுத்த அரும் புண்யானை - அம்பு சென்று தைத்த பொறுத்தற்கரிய புண்ணையுடைய யானையினது; தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து - துளையையுடைய பெருங்கை வாயுடனே துணிந்து வீழ்ந்து; நாஞ்சில் ஒப்ப - கலப்பையை யொப்ப; நிலமிசைப் புரள - நிலத்தின்மேலே புரள; எறிந்து களம் படுத்த - வெட்டிப் போர்க்களத்தின் கண்ணே வீழ்த; ஏந்து வாள் வலத்தர் - ஏந்திய வாள் வெற்றியை யுடையோராய்; எந்தையொடு கிடந்தோர் எம்ம புன் தலைப் புதல்வர் - எம் தலைவனொடு கிடந்தார் எம்முடைய புல்லிய தலையையுடைய மைந்தர்; இன்ன விறலும் உளகொல் நமக்கு - இப்பெற்றிப்பட்ட வென்றியும் உளவோ நமக்கு; என - என்று சொல்லி; மூதில் பெண்டிர் கசிந்தழி - முதிய மறக்குடியிற் பிறந்த பெண்டிர் இன்புற்று உவகையால் அழ; நாணி - அது கண்டு நாணி; கூற்றுக் கண்ணோடிய - கூற்றம் இரங்கிய; வெருவரு பறந்தலை - அஞ்சத்தக்க போர்க்களத்தின்கண்ணே; எழுவர் நல்வலங் கடந்தோய் - இரு பெரு வேந்தரும் ஐம்பெரு வேளிருமாகிய எழுவரது நல்ல வலியை வென்றோய்; நின் கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பு - நினது கழுவி விளங்கின முத்தாரம் அகத்திட்ட மார்பை எ-று.
தமிழ் தலை மயங்கிய வென்புழித் தலை: அசைநிலை; இடமுமாம். செழிய, கடந்தோய், நின் மார்பை யான் விரும்பி முயங்கினெ னல்லனோ வெனக் கூட்டுக. பெருங்கல் அடாருமென்ற வும்மை, எமக்கு விருப்பஞ் செய்தலேயன்றி நின் பகைவர்க்கு வருத்தஞ் செய்தலான், நின் மார்பு கல்லடாரும் போலுமென எச்சவும்மையாயிற்று; சிறப்பும்மையுமாம். மூதிற் பெண்டிர் கசிதலால் நாணி யெனவும், அழுதலாற் கண்ணோடிய வெனவும் நிரனிறையாகக் கொள்க. போர் முடிதலாற் போயின கூற்றை நாணியும் கண்ணோடியும் போயிற்றுப் போலக் கூறியது ஓர் அணி கருதி நின்றது. இனி, அம்பு தைத்த யானையை வெட்டிப் படுத்தல் மறத்திற் கிழிபென்று பெண்டிர் இரங்கி யழுதலின், கூற்றுக் கண்டு நாணிக் கண்ணோடியதென் றுரைப்பாரு முளர்.
|