பக்கம் எண் :

58

    

20. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை

     ஆசிரியர் குறுங்கோழியூர் கிழார் இப்பாட்டின்கண் யானைக்கட்சேய்
மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் செங்கோலாட்சியின் செம்மையைப்
புகழ்ந்து, “செம்மலே, நீ அறம் துஞ்சும் செங்கோலையுடைய; அதனால்
நின்னாட்டவர் புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் நடுக்கம் சிறிதும்
இலராய் இன்பத்திலே திளைத்திருக்கின்றனர். அவர்கள் நின்செம்மைப்
பண்பு கருதி நின்னுயிர்க்கு ஏதேனும் ஏதம் வருமோ வென எண்ணி
அன்பால் அஞ்சியிருக்கின்றனர்காண்” எனப் பாராட்டுகின்றார்.

  இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத் தகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும், என்றாங்
5.கவையளந் தறியினு மளத்தற் கரியை
 அறிவு மீரமும் பெருங்க ணோட்டமும்
சோறுபடுக்குந் தீயொடு
செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது
பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே
10. திருவி லல்லது கொலைவில் லறியார்
 நாஞ்சி லல்லது படையு மறியார்
திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப்
பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு
வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
15. பகைவ ருண்ணா வருமண் ணினையே
  அம்புதுஞ்சுங் கடியரணால்
அறந்துஞ்சுஞ் செங்கோலையே
புதுப்புள் வரினும் பழம்புட் போகினும்
விதுப்புற வறியா வேமக் காப்பினை
20. அனையை யாகன் மாறே
 மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே. (20)

     திணையும்  துறையும்  அவை.  சேரமான்  யானைக்கட்சேய்
மாந்தரஞ் சேர லிரும்பொறையைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.

     உரை: இரு முந்நீர்க் குட்டமும் - பெரிய கடலினது ஆழமும்;
வியன் ஞாலத் தகலமும் - அகன்ற உலகத்துப் பரப்பும்; வளி வழங்கு
திசையும் - காற்றியங்குந் திசையும்;  வறிது  நிலைஇய  காயமும் -
வடிவின்றி நிலைபெற்ற ஆகாயமும்; என்ற ஆங்கவை - என்று
சொல்லப்படுமவற்றை;