| என்றார். பெருங்காதலாற் பிணிக்கப்பட்டார் தம்முள் ஒருவரொருவர்க்கு யாது தீங்கு நேருமோ என்ற அச்சத்தால் அடிக்கடி வருத்தப்படுவராதலால், மன்னுயி ரெல்லாம் நின் அஞ்சும்மே என்றார். அஞ்சுதற்கேது ஆசிரியர் கூறாமையின், தத்தம் காதலால் என்ற உரையின்கண் பெய்து கூறினார். அறிவும் ஈரமும் கண்ணோட்டமும், அவற்றையுடைய சேரமானும் முறையே சினையும் முதலுமாதலின், சினையொடு முதற்கொற்றுமை யுண்மையால், நீ அறிவும் ஈரமும் காண்ணோட்டமும் அளத்தற் கரியை என்றார். அளத்தற்கருமை, அறிவு முதலாயவற்றிற் குரியவாகும். அஃது அளத்தற் கரியை நீ என முதன்மேல் நிற்பது காண்க. பகைவ ருண்ணா அரு மண்ணினை என்ற விடத்து, அருமை பெறற்கருமை குறித்து நின்றது. சூலுற்ற மகளிர் புளியும் மண்ணும் உண்பர் என்ப. அதனால், வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகைவ ருண்ணா அருமண்ணினையே என்று கூறுகின்றார். திறனறி வயவர் - போர் செய்யும் கூறுபாட்டை யறியும் வீரர். திறம் - கூறுபாடு.
21. கானப்பே ரெயில்கடந்த உக்கிரப் பெருவழுதி இப் பெருவழுதி பாண்டி வேந்தருள் பழையோருள் ஒருவன். இவன் காலத்து ஏனை முடிவேந்தரான சேரமான் மாரி வெண்கோவும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் இவற்கு நண்பராயிருந்தனர். ஒருகாலத்து இம்மூவரும் ஒருங்கிருந்த காட்சி கண்டு ஒளவையார் மகிழ்ந்து பாடியுள்ளார். அகநானூற்றைத் தொகுப்பித்தோன் இவன் என்பர். இவன் முன்பே திருவள்ளுவரது திருக்குறள் அரங்கேற்றப்பட்டதென்றும் கூறுப. கானப்பேர் என்பது இப்போது காளையார் கோயிலென வழங்குகிறது. இது பாண்டிநாட்டிலுள்ளது. இவன் காலத்தே இது வேங்கை மார்பன் என்னும் குறுநில மன்னற் குரியதாய் நல்ல அரணமைந்து விளங்கிற்று. இவன் அம்மன்னனை வென்று அக்கானப்பேரெயிலைத் தனக்குரித்தாகக் கொண்டான். அதனாற்றான், இவற்குக் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனப் பெயர் வழங்குகிறது.
கானப் பேரெயில் கடந்து வென்றி கொண்டு விளங்கும் மேம்பாட்டைக் கண்டு வியந்து ஐயூர் மூலங்கிழார் என்னும் சான்றோர் இப்பாட்டின்கண் இக்கானப்பேரெயிலின் அரண் சிறப்பை யெடுத்தோதி, அதற்குரியனான வேங்கை மார்பன், இனி, இஃது இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிது என இரங்குமாறு இவன் அதனைக் கடந்த செய்தியைப் பாராட்டி வாழ்த்துகின்றார். ஐயூர் மூலம் என்பது ஓரூர். ஐயூர் என்பது வேறு; ஐயூர் மூலமென்பது வேறு. | புலவரை யிறந்த புகழ்சா றோன்றல் நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி வான்றோய் வன்ன புரிசை விசும்பின் மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற் | 5. | கதிர் நுழை கல்லா மரம்பயில் கடிமிளை | |