பக்கம் எண் :

69

    

கொண்டு வரும் மறவர் தம்மாற் கொள்ளப்படாது ஒழிந்து நிற்கும் பொருள்
பிறர்   எவர்க்கும்   பயன்படாவாறு,   அவற்றை யழித்துச் சிதைப்பதும்
விளைவயல்களை யழித்துவிடுவதும் பண்டைய போர் மரபு. இவ்விருபதாம்
நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டாவது உலகப்போரிலும்  இச்   செயல்கள்
நிகழ்ந்தனவாதலால்,  இஃது எக்காலத்துப்   போர்க்கும்  இயல்பு  எனத்
தெரிகிறது.மனைகளில் விருந்தோம்பல் முதலிய நற்செயல் குறித்த சோறடும்
தீயை “வெவ்வெரி” யென்றார்.  தெறிநடை துள்ளி  நடை.  கண்டனென்
வருவல்  என்றது,    காண்பேனாய்    வந்தேன்   என    இறந்தகாலப்
பொருளதாதலின், “இறந்த கால......நின்ற”   தென்றார். செய்   பொருளின்
தோற்றம் செய்தோரைக்  காண்போர் மனக் கண்ணிற்  றோற்றுவித்தலின்,
“செய்த வென்றியெல்லாங் கண்டமையின்” என்றார்  நவியமாகிய   கருவி
தானாகச் சென்று மரத்தை வெட்டாது; அதனைக் கையாள்வோன் செயலை
அதன் செயலாக வைத்து, கருவி கருத்தாவாகக் கூறுதல் மரபு; இவ்வாள்
நன்றாக அறுக்கும் என்பதுபோல. காணிய வந்தேன் என வுரைப்பதாயின்,
காண்பதற்காக வந்தேன் என அதற்குப் பொருள் கொள்க.

24. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்

     பத்துப்பாட்டிற்   காணப்படும்   மதுரைக்காஞ்சி  பாடிய மாங்குடி
மருதனார், இப் பாட்டினும் அக் காஞ்சியே   பொருளாகப்   பாண்டியன்
நெடுஞ்செழியனைப் பாடுகின்றார். இதன்கண் “நல்ல ஊர்களை இடமாகக்
கொண்டு சிறந்த எவ்வி  யென்பானுக்குரிய   மிழலைக்    கூற்றத்தையும்
முதுவேளிர்க்குரிய   முத்தூற்றுக்    கூற்றத்தையும்  வென்று  கொண்ட
நெடுஞ்செழிய, நின் நாண்மீன்  நிலைபெறுக; நின்   பகைவர்   நாண்மீன்
பட்டொழிக; வாள் வீரர் வாழ்த்தப், பரிசிலர்   புகழ்   பாட,  மகளிரொடு
மகிழ்ந்து    இனிதொழுகுவாயாக;  அங்ஙனம்   ஒழுக  வல்லோரையே
வாழ்ந்தோர் என்பர். இவ்வுலகத்தே தோன்றிப் புகழ்தோற்றுவியாது உயிர்
வாழ்ந்து விளிந்தவர் பலராயினும் அவர் வாழ்ந்தோர் எனப் படார்” என்று
நாளும் போர் கருதியுழலும் அவன் நெஞ்சினைத் தெருட்டி இன்ப வாழ்வில்
ஈடுபடச் செய்கின்றார். அருளும் பொறையு மேவு முள்ளத்தனாவ னென்பது
கருத்து.

  நெல்லரியு மிருந்தொழுவர்
செஞ்ஞாயிற்று வெயின்முனையின்
வெண்கடற்றிரை மிசைப்பாயுந்து
திண்டிமில் வன்பரதவர்
5. வெப்புடைய மட்டுண்டு
  தண்குரவைச் சீர்தூங்குந்து
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்