பக்கம் எண் :

7

 

பொருள்  கூறலாமாதலால்  “நிலங்கோடல்  காரணமாகத்  தலைக்கட்
சூடிய   வெனினு  மமையும்”  என்றார். பெருஞ் சோற்று மிகுபதம்
- பெரிய சோறாகிய மிக்க வுணவு. பொருது களத்தொழிந்தவழி, சோறு
கொடுத்தற்கு வழியின்மையின், ஒழிய வென்றதற்கு, “போர்க்களத்தின்கட்
படுந்துணையும்” என்று பொருள் கூறினார். முழுது என்பது எஞ்சாமை
குறித்தலின், ஒழியா தென்றுரைத்தார். திரியாச் சுற்றம் என்றவிடத்து, திரிதல்
சுற்றத்தார்க் காகாது அவரது சூழ்ச்சிக் காதலால், இதற்கு வேறுபாடில்லாத
சூழ்ச்சியையுடைய மந்திரச் சுற்றம் என்று உரைகூறினார். சிறுதலை நவ்விப்
பெருங்கண் மாப்பிணை யென்றவிடத்து, பிணை யென்றது பெண்மானுக்
கானமையின் சிறுதலை நவ்வி யென்றது சிறிய தலையையுடைய மான்மறிக்
காயிற்று. மறி, கன்று. “மறியிடைப் படுத்த மான்பிணை” (ஐங் 401) என
வருதல் காண்க. அரசியலடைவாவது பொறை, சூழ்ச்சி, வலி, தெறல்,
அளியென நிற்கும் நீருமென முறையே பாட்டின்கட் கூறப்படுகின்றன.
பொறைக்கு நிலமும், சூழ்ச்சிக்கு விசும்பும், வலிக்கு வளியும்,
தெறலுக்குத் தீயும், அளிக்கு நீரும் அடைவு எனவுணர்க. “அகழ்வாரைத்
தாங்கும் நிலம்” (குறள்.151) என்றும், “விசும்பினன்ன சூழ்ச்சி”
(பேரா. உரை. மேற். உவம.6) என்றும், “வளி மிகின் வலியு மில்லை”
(புற.51) என்றும் வருதல் காண்க. பூதங்களின் அடைவாவது நிலம், நீர்,
தீ, வளி விசும்பு என நிற்பது. பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்று
நடுக்கின்றி நிலியர் என இப்பாட்டுக் கூறுவதை யுட்கொண்டே
இளங்கோவடிகள், இமயத்தும் பொதியிலிடத்தும் உயர்ந்தோ ருண்மையின்,
உயர்ந்தோர் இவற்றிற்கு ஒடுக்கம் கூறார் என்று கூட்டி, இமயமாயினும்
பொதியிலாயினும் புகாரேயாயினும் “நடுக்கின்றி நிலைஇய வென்ப
தல்லதை, ஒடுக்கங் கூறார் உயர்ந்தோருண்மையின், முடித்த கேள்வி
முழுதுணர்ந்தோரே” என்று கூறுவது ஒப்புநோக்கத்தக்கது. இமயப்
பொற்கோட்டையும் பொதியத்தையும் சேர வெடுத்தோதுதலால்,
இமயத்து அடிப் பகுதியில் நடந்த பாரதப் போர்நிகழ்ச்சியில் சேரமான்
செய்த நடுநிலையுதவியை இவர் நேரிற் கண்டறிந்தவ ரெனத் துணிதற்
கிடனாகிறது.

3. பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி

     இப் பெரும்பெயர் வழுதி இப்பாட்டின்கண் ஆசிரியர் இரும்பிடர்த்
தலையாரால் “கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி” யெனவே
பாராட்டப்படுகின்றா னாதலால் இவனது பெயரும் இதுவே போலும். இவன்
கவுரியர் வழித்தோன்ற லென்றும், தன்பால் வரும் இரவலர் குறிப்பறிந்து
அவர் வேண்டுவன நல்கும் பெருங்கொடை வள்ளல் என்றும், இதனால்
இவனிடம் இரவலர் வந்தவண்ணமே யிருப்பரென்றும் கூறி, இவ்வகையால்
உண்டாகும் புகழினும், சொல் தவறாத வாய்மையால் உண்டாகும் புகழே
மிகச் சிறந்த தாதலால், “நிலம் பெயரினும் நின்சொல் பெயரல்” என்றும்
இப்பாட்டின்கண் ஆசிரியர் வற்புறுத்துகின்றார்.

     இப்பாட்டினைப் பாடிய ஆசிரியர் இரும்பிடர்த்தலையார் சோழன்
கரிகாலனுக்கு அம்மான் என்று கூறுவர். இவர் யானையின் பெரிய
கழுத்தை இப்பாட்டின்கண் இரும்பிடர்த்தலை யென்று சிறப்பித்துக்
கூறுவது பற்றி,