திமிலையுடைய வலிய நுளையர்; வெப்புடைய மட்டுண்டு - வெம்மையை யுடைய மதுவையுண்டு; தண் குரவைச் சீர் தூங்குந்து - மெல்லிய குரவைக் கூத்திற்கேற்ற தாளத்துக்கேற்ப ஆடும்; தூவற் கலித்த தேம்பாய் புன்னை - கடற்றுவலையாலே தழைத்த தேன் பரந்த புன்னையினது; மெல்லிணர் கண்ணி மிலைந்த மைந்தர் - மெல்லிய பூங்கொத்தாற் செய்யப் பட்ட மாலையைச் சூடிய ஆடவர்; எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து - விளங்கிய வளையையுடைய மகளிர்க்கு முதற்கை கொடுக்கும்; வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் - வண்டு மொய்ப்ப மலர்ந்த குளிர்ந்த நறிய கானலிடத்து; முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர் - கடல்முள்ளிப் பூவாற் செய்யப்பட்ட மாலையையுடைய விளங்கிய வளையையணிந்த மகளிர்; இரும்பனையின் குரும்பை நீரும் - பெரிய பனையினது நுங்கின் நீரும்; பூங் கரும்பின் தீஞ்சாறும் - பொலிவினையுடைய கரும்பினது இனிய சாறும்; ஓங்கு மணல் குவவுத் தாழை தீ நீரோடு - உயர்ந்த மணலிடத்துத் திரண்ட தெங்கினது இனிய இளநீருடனே; உடன் விராஅய் கூடக் கலந்து; முந்நீர் உண்டு - இம் மூன்று நீரையுமுண்டு; முந்நீர்ப் பாயும் - மூன்று நீரையுடைய கடற்கண்ணே பாயும்; தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய - பரிக்க வொண்ணாத பல மக்களும் வாழ்தலையுடைய நல்லவூர்கள் பொருந்திய; ஓம்பா ஈகை மாவேள் எவ்வி - பொருளைப் பாதுகாவாத வண்மையையுடைய பெரிய வேளாகிய எவ்வியது; புனலம் புதவின் மிழலையொடு - நீர் வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக் கூற்றத்துடனே; கழனிக் கயலார் நாரை - வயலிடத்துக் கயலை மேயும் நாரை; போர்விற் சேக்கும் - போரின்கண்ணே யுறங்கும்;பொன்னணி யானைத் தொன் முதிர் வேளிர் - பொன்னணிந்த யானையையுடைய பழைய முதிர்ந்த வேளிரது; குப்பை நெல்லின் முத்தூறு தந்த -திரண்ட நெல்லினையுடைய முத்தூற்றுக் கூற்றத்தைக்கொண்ட; கொற்ற நீள் குடைக் கொடித் தேர்ச் செழிய - வெற்றி பொருந்திய உயர்ந்த குடையினையும் கொடியாற் பொலிந்த தேரினையுடைய செழிய;நின்று நிலைஇயர் நின் நாண் மீன் - நின்று நிலைப்பதாக நினது நாளாகிய மீன்; நில்லாது படாஅச் செலீஇயர் நின் பகைவர் மீன் - நில்லாது பட்டுப் போவதாக நின் பகைவருடைய நாளாகிய மீன்;நின்னொடு தொன்று மூத்த உயிரினும் - நின்னொடு பழைய தாய்முதிர்ந்த உயிரினும்; உயிரொடு நின்று மூத்த யாக்கையன்ன -உயிருடனே நின்று முதிர்ந்த உடம்பு போன்ற; நின் ஆடு குடி மூத்த விழுத்திணைச் சிறந்த வாளின் வாழ்நர் - நினது வெற்றிக் குடியோடு மூத்த சீரிய குடியின்கட் சிறந்த வாட்போராலே வாழ்வோர்; தாள் வலம் வாழ்த்த - நினது
|