பக்கம் எண் :

75

    

      படுதல்பற்றி,   மடை யென்றாராக,   உரைகாரர்    அதனைக்
“கொளுத்து” என்றார்.  மெய்ம்மறத்தற்கு  ஏது அறிவுமயக்கமாதலால்,
மெய்ம்மறந்தென்றதற்கு அறிவு மயங்கி என வுரைத்தார். மகளிர் கூந்தல்
களைவது காணாவழி, வேல்கொண்டு தாக்குதலால், அவ்வேல் ஆற்றாது
மடைசிதைந்து கெடுமெனப் போரின் கடுமை யுடைத்தாராயிற்று. இதனால்
கணவனை யிழந்த மகளிர் தம் கூந்தலைக் கொய்து கொள்ளும் வழக்குப்
பண்டைத் தமிழ் வழக்காதல் துணியப்படும்.


26. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்


     மாங்குடி  கிழாராகிய   மருதனார்  இந் நெடுஞ்செழியனது உயர்வு
கண்டு, “அடுபோர்க் செழிய, நான்மறை   முதல்வரும்  துணைவேந்தரும்
சுற்றமாய்ச் சுற்ற, வேள்வி பல செய்த வேந்தே,நின் பகைவர் இவ்வுலகத்தே
நின்பால் பகைமையுற்றுப் பொருது துன்புற்று வீழ்ந்தாராயினும்  துறக்கவும்
புக்கு   இன்புறுகின்றாராதலால், அவர் நோற்றவரேயாவர்” என்று பாடிப்
பாண்டியன்   சிறப்பைப் பாராட்டுகின்றார்.

 நளிகட லிருங்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களனகற்றவும்
களனகற்றிய வியலாங்கண்
5. ஒளிறிலைய வெஃகேந்தி
 அரைபட வமருழக்கி
உரைசெல முரசுவௌவி
முடித்தலை யடுப்பாகப்
புனற்குருதி யுலைக்கொளீஇத்
10. தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின்
  அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்ன ரேவல் செய்ய மன்னிய
15. வேள்வி முத்திய வாய்வாள் வேந்தே
 நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு
மாற்ற ரென்னும் பெயர்பெற்
றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே (26)

     திணையுந் துறையு மவை. அவனை மாங்குடி கிழார் பாடியது.