| உரை: நளி கடல் இருங் குட்டத்து வளி புடைத்த கலம் போல - பெரிய கடலின்கண் பெரிய ஆழத்திடத்துக் காற்றாற் புடைக்கப்பட்ட மரக்கலம் நீரைக் கிழித்து ஓடுமாறு போல; களிறு சென்று களன் அகற்றவும் - களிறு சென்று போர்க்களத்தை இடமகலச் செய்ய; களன் அகற்றிய வியலாங்கண் - அவ்வாறு களம் அகலச்செய்த பரந்த இடத்தின்கண்; ஒளிறு இலைய எஃகேந்தி - விளங்கிய இலையையுடைய வேலை யேந்தி; அரைசு பட அமர் உழக்கி - வேந்து படப் போரைக் கலக்கி; உரை செல - புகழ் பரக்க; முரசு வௌவி - அவர் முரசைக் கொண்டு; முடித்தலை அடுப்பாக - முடித்தலையை யடுப்பாகக் கொண்டு; புனல் குருதி உலைக் கொளீஇ - குருதிப் புனலாகிய உலையின்கண் தசையும் மூளையு முதலாயினவற்றைப் பெய்து; தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின் - வீர வளையையுடைய தோளாகிய துடுப்பால் துழாவி யடப்பட்ட உணவால்; அடு களம் வேட்ட அடு போர்ச் செழிய - அடுகளத்தின்கண் கள வேள்வி வேட்ட கொல்லும் போரையுடைய செழிய; ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றமாக - அமைந்த கேள்வியையும் ஐம்புலனு மடங்கிய விரதங்களையும் நான்கு வேதத்தையுமுடைய அந்தணர் சுற்றமாக; மன்னர் ஏவல் செய்ய - வேந்தர் அதற்கேற்ப ஏவல் செய்ய;மன்னிய வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே - நிலைபெற்ற வேள்வியைச் செய்து முடித்த வாய்த்த வாளினையுடைய வேந்தே; மன்ற நோற்றோர் நின் பகைவர் - யாவர்க்கும் தெளிவாகத் தவஞ் செய்தார் நின்னுடைய பகைவர்; நின்னொடு மாற்றார் என்னும் பெயர் பெற்று - நினக்குப் பகைவரென்னும் பெயரைப் பெற்று; ஆற்றா ராயினும் - நின்னொடு போர் செய்தற்கு மாட்டாராயினும்; ஆண்டு வாழ்வோர் - அத் துறக்கத்து வாழ்வோர் எ-று.
களகற்றவு மென்னும் உம்மை அசைநிலை. மன்னிய வேள்வி யென்றது,கள வேள்வி யொழிந்த வேள்விகளை. செழிய வேந்தே, ஆற்றாராயினும் ஆண்டு வாழ்வோராகிய நின் பகைவர் மாற்றா ரென்னும் பெயர்பெற்று நோற்றாரெனக் கூட்டுக.
விளக்கம்: காற்றாற் புடைக்கப்பட்ட மரக்கலம் மலைபோலெழும் கடலலைகளைக் கிழித்துக்கொண்டு விரைந்தேகுவது ஒருதலையாதலால், வளிபுடைத்த கலம் என்றதற்கு, காற்றாற் புடைக்கப்பட்ட மரக்கலம் நீரைக் கிழித்தோடு மென வுரைத்தார். முன்னே யானையைச் செலுத்தியவழி அதன்உடற்பருமையும் வலியும் கண்டு ஈண்டித் தம்முள் சேர்ந்திருக்கும் படை வீரர் இடம் விட்டு அகல நின்றாராக, அவ்வழியே தானை வீரர் விரைந்து சென்று பகை வீரரிடை நின்று பொருது அவரை யழிப்பதாகிய போர்ச்செயல்முறை இதனால் குறிக்கப்படுகிறது. முடித்தலை - முடியணிந்த வேந்தர் தலை. உலைக் கொளீஇ யென்றதனால் உலையிடத்துப் பெய்து கொள்ளப்படுவன தசையும் மூளையு முதலாயின என்றார்.
|