| நிற் போற்றாமை யென்ற கருத்து, சிதடு முதல் அறிவின்மை பிறப்பொடு கூடாதவாறு போல நின் செல்வமும் அற முதலியன செய்தற் கேற்றிருப்பச் செய்யாமையாகிய அறிவின்மை, மக்கள் யாக்கையிற் பிறந்தும் பயனில் பிறப்பாகப் பண்ணுதலால் நினக்கு வரும் பொல்லாங்கைப் போற்றாமை யென்பதாம். கானத்தோர் நின் பகைவ ரென்றதனாற் பகையின்மை தோற்றி நின்றது. மாவும் மருளு முளப்படச் சிதடு முதலாகப் பிறப்பொடு கூட்டப்படாத பெரிய எச்சமெனப்பட்ட எட்டுமெனக் கூட்டியுரைப் பினுமமையும்.இஃது அறஞ் செய்யாதானை அறஞ் செய்கவெனக் கூறியவாறு. அதன்றிற மென்பதற்கு அப் பேதைமை யென்றாக்கி, அஃது உண்டானால் வரும்பொல்லாங்கும், அது போனால் வரும் நன்மையு மென்றுரைப்பாரு முளர்.
விளக்கம்: சிதடு - குருடு. கண்ணிற் சிறந்த உறுப்பில்லை என்பராதலால், கண்ணிலாக் குருட்டினைச் சிறப்பில் குருடன் என்றார்; உரைகாரர், குருடு மக்கள் பிறப்புக்குச் சிறப்புத் தருவதன் றென்பதுபட, மக்கட் பிறப்பிற் சிறப்பில்லாத குருடு என்பர். கை கால் முதலிய உறுப்புக்கள் தோன்றுதற்கு முன்பே கருச் சிதைதலால் பிறக்கும் ஊன் பிண்டத்தை, உறுப்பில் பிண்டம் என்றும், அது வடிவ இல்லாததசைத் திரளென்றும் கூறினார். ஊன் தடி பிறப்பினும் (புறம்: 74) எனச் சேரமான் கணைக்கா லிரும்பொறை கூறுவது காண்க. எச்சம், மக்கட் பிறப்புக்குரிய இலக்கணம் எஞ்சவுள்ளன. ஈண்டுக் கூறிய எண்வகைக் குறைபாடுமின்றி யிருக்கும் பிறப்பு மக்களது நற்பிறப்பென வறிக. இக் குறையுடைய மக்கள் பேதைத்தன்மை யுடையரென்பார், பேதைமை யென்பதற்குப் பேதைத்தன்மையுடைய பிறப்பு என்றார். பேதைமை யென்பதொன் றியாதெனின் ஏதங்கொண்,டூதியம் போகவிடல் (குறள்.831) என்பதனால், பேதைமை யல்லது ஊதியம் இல் லென்றார். கோழி, விடியலில் எழுந்து கூவி, உறங்குவோரைத் துயிலுணர்த்தும் என்ற இயல்புபற்றி,ஏனல் காப்போர் உணர்த்திய கூவும் என்றார்.உணர்த்துதல், துயில் உணர்த்துதல். வைகறை வந்தன்றா லெனவே, குக்கூ வென்றது கோழி (குறுந்.157) என்று பிறரும் கூறுதல் காண்க. சிறைப்புறம் என்பது புறஞ் சிறையென வந்தது. கழை, இக்காலத்துக் கட்டையெனவும் கழியனெவும் வழங்கும். கூத்தர் பல்வகைப் பூவும் அணியும் அணிந்து ஆடுவர்;ஆடுங்கால் அவை உதிர்ந்து கிடக்கும் இடம்,இங்கே உவமமாகக் கூறப்படுகிறது. மணை, ஊன், மக்கட் பிறப்பாற் பெறும் பயன் அறம் பொருளின்பங்களாதலால், அப்பிறப்பிற் குறைந்தவர் அவற்றை யிழத்தலின், அற முதலிய ஊதிய மெனப்பட்டன. ஊதியமாவது அறமொன்றுமே யெனக் கொள்பவரும் உண்டென்றற்கு, அன்றி.......உளர் என்றார். பகை கொண்டிருந்தால் நாட்டிலிருந்து குறும்பு செய்வராதலின், செய்யாது கானத் துறைதல் கொண்டு பகையில்லை யென்பது தெளிவாயிற்று. அதன் திறம் என்றவிடத்து, அது எனச் சுட்டப்பட்டது ஊதிய மெனக் கொள்ளாது பேதைமை யென்று கொள்பவரு முண்டென்பதை, அதன் நிறம்.......உளர் என்றார்.
|