| வருநர்க்கு உதவியாற்றும் - நின்பால் வருவார்க்கு உதவி செய்யும்; நண்பிற் பண்புடை ஊழிற்றாக நின் செய்கை - நட்போடு கூடிய குணத்தையுடைய முறைமை யுடைத்தாக நினது தொழில்; விழவிற் கோடியர் நீர்மை போல - விழவின்கண் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம் போல; முறைமுறை ஆடுநர் கழியும் இவ்வுலகத்து - அடைவடைவே தோன்றி இயங்கி இறந்து போகின்ற இவ்வுலகத்தின்கண்; கூடிய நகைப் புறனாக நின் சுற்றம்- பொருந்திய மகிழ்ச்சி யிடத்ததாக நின்னுடைய கிளை; இசைப்புறனாக நீ ஓம்பிய பொருள் - புகழிடத்ததாக நீ பாதுகாத்த பொருள் எ-று.
நின் நாண் மகிழிருக்கை பாண் முற்றுக; அதன்பின் அகலம் தோள் முற்றுக;நீ மடிவிலையாய் இனனாகா தொழிவாயாக; நின் பற்றா மாக்களைப்போல முற்காலத்துச் சிறுமனை வாழும் வாழ்க்கையி னீங்கி இப்பொழுது நின் நாடு பெற்றுவக்கும் நின் படைகொள் மாக்கள் வருநர்க்கு உதவியாற்றும் நண்போடு கூடிய பண்புடைத்தாகிய முறைமையை யுடைத்தாக நின் செய்கை;நகைப்புறனாக நின் சுற்றம்; இசைப்புறனாக நீ ஓம்பிய பொருளெனக் கூட்டுக.
ஒரீஇ யென்பதனை யொருவ வெனத் திரிப்பினு மமையும். நறுமை பொன்னிற் கின்றெனினும் தெரியற்கு அடையாய் நின்றது; நன்மையுமாம். ஆங்க: அசை. நசைப்புறனாக வென்றுரைப்பாரு முளர். இதனாற் சொல்லியது படைகொண் மாக்களும் முறை முதலாயின தப்பாமற் செய்து இன்புற்றிருக்கும்படி சிறப்புச் செய்யவேண்டு மென்பதாயிற்று.
விளக்கம்: இருந். தலை: இருமை, கருமைப் பண்பு குறித்து நின்றது. இரும்பிடித் தொழுதி (புறம்.44) என்புழிப் போல, கட்கினிய அலங்காரத்தால் தன்கண் வந்திருந்தாரை நீங்காவாறு பிணித்து இன்புறுத்தும் சிறப்புடைய கோயில் முற்றத்தை, முனிவில் முற்றம் என்றார் ஒடியா முறைமை இடையறவு படாத முறைமை; முக்குணங்களும் கணந்தோறும் மாறும் இயல்பினவாதலின்,அதனால் முறைமை மாறாமை தோன்ற, ஒடியா முறைமை யென்றார். நெற்கதிர்களை மேய்ந்துண்ணும் கிளி முதலிய புட்கள், படுபுள் ளெனப்படுகின்றன. வெங்கள் ளென்புழி வெம்மை மயக்கஞ் செய்யும் களிப்பு. பெற்றனர்: முற்றெச்சம். தம்மைக் கண்டவழிப் பகைமையால் தெறுதலைச் செய்யாது அருள் செய்யுமாறு மெலிவு புலப்படுத்தி நிற்கும் பகைவர்போல வென்பார், பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து என்றார்.கோடியர் நீர்மை, கூத்தருடைய வேறுபட்ட கோலம். கூத்தரது கோலம் தோன்றி நின்றியங்கி மறைவது, உலகம் தோன்றிநின்று மறைதற்கு உவமமாயிற்று. ஒரீஇ யென்பது செய்தெனெச்சமாய் ஆற்றும் என்பதனொடு முடியும். ஒருவ வெனத் திரிப்பின், மாந்தர் வாழ்க்கையின் ஒருவ, நின் செய்கை ஊழிற்றாக என இயையும்; அவ்வழியும் பொருள் நலங் குன்றாமையின், அமையும் என்றார். பொன் மாலைக்கு மணமில்லையாகவும், நறுந் தெரிய லென்றதற்கு அமைதி கூறுவார், தெரியற்கு அடையாய் நின்ற தென்றார். நறுமை நன்றாதலின், நன்மை யெனப் பொருள் கொண்டு நல்லமாலை யென்று உரைப்பினுமாம் என்றற்கு நன்மையுமாம் என்றார்.
|