30. சோழன் நலங்கிள்ளி
உறையூர் முதுகண்ணன் சாத்தனார், இப்பாட்டின்கண், சோழன்
நலங்கிள்ளிபாற் காணப்படும். அடக்கமாகிய பண்பு கண்டு வியந்து,
வேந்தே, செஞ்ஞாயிற்றின் செலவும், அதன் பரிப்பும், மண்டிலமும், திக்கும்,
ஆகாயமும் என இவற்றின் அளவை நேரிற் சென்று கண்டவரைப் போலத்
தம் அறிவால் ஆராய்ந்துரைப்போரும் உளர்; அவர்களாலும் ஆராய்ந்தறியக்
கூடாத அத்துணை அடக்கமுடையனாய்க் கல்லைக்கவுளில் அடக்கியுள்ள
களிறுபோல வலி முழுதும் தோன்றாதவாறு அடக்கிக் கொண்டு
விளங்குகின்றாய்என்று பாராட்டுகின்றார்.
| செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமு மென்றிவை |
5 | சென்றளந் தறிந்தோர் போல வென்றும் |
| இனைத்தென் போரு முளரே யனைத்தும் அறிவறி வாகாச் செறிவினை யாகிக் களிறுகவு ளடுத்த வெறிகற் போல ஒளித்த துப்பினை யாதலின் வெளிப்பட |
10 | யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே. (30) |
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. அவனை அவர்
பாடியது.
உரை : செஞ்ஞாயிற்றுச் செலவும் - செஞ்ஞாயிற்றினது வீதியும்;
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் - அஞ் ஞாயிற்றினது இயக்கமும்; பரப்புச்
சூழ்ந்த மண்டிலமும் - அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார்
வட்டமும்;வளி திரிதரு திசையும் - காற்றியங்கும் திக்கும்; வறிது
நிலைஇய காயமும் - ஓராதாரமுமின்றித் தானே நிற்கின்ற ஆகாயமும்;
என்ற இவை சென்று அளந் தறிந்தோர் போல - என்று
சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய்
அளந்தறிந்தவர்களைப் போல; என்றும் இனைத்து என்போரும் உளர்
- நாளும் இத்துணையளவை யுடையனவென்று சொல்லும் கல்வியை
யுடையோரு முளர்; அனைத்தும் அறிவு அறிவாகாச் செறிவினையாகி -
அப்பெரியோர் அச் செலவு முதலாயின அறியும் அறிவாலும் அறியாத