| அடக்கத்தை யுடையையாகி; களிறு கவுள் அடுத்த எறி கல் போல - யானை தன் கதுப்பின்கண் அடக்கிய எறியும் கல்லைப் போல; ஒளித்த துப்பினை யாதலின் - மறைந்த வலியையுடையை யாதலான்; வெளிப்பட யாங்ஙனம் பாடுவர் புலவர் - நின்னை விளங்க எப்பரிசு பாடுவர் புலவர், கூம்பொடு மீப்பாய் களையாது - கூம்புடனே மேற் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல்; மிசைப் பரம் தோண்டாது - அதன்மேற் பாரத்தையும் பறியாமல்; புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் - ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை; தகாஅர் பரதவரும் - அளவரு முதலாகிய தகுதி யில்லாதோர்; இடைப்புலப் பெரு வழிச் சொரியும் - தம் புலத்திற் கிடையாகிய பெருவழிக்கண்ணே சொரியும்; கடல் பல் தாரத்த - கடலால் வரும் பல பண்டத்தையுடைய; நாடு கிழவோய் - நாட்டை யுடையோய் எ-று.
செல வென்றது, செல்லப்படும் வீதியை. பரிப்பென்றது, இத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனை செல்லுமென்னும் இயக்கத்தை. பாய் களையாது பரம் தோண்டா தென்பதனால், துறை நன்மை கூறியவாறாம். பெருங்கலத்தி னின்றென ஐந்தாவதாக உரைப்பினு மமையும். துப்பினை யாதலிற் புலவர் யாங்ஙனம் பாடுவர் எனக் கூட்டுக. விளக்கம்: மண்டில மென்றது வட்டமாதலின் ஈண்டு நிலவட்டத்தைப் பார் வட்ட மென்றார். வறிது என்றது இன்மைப் பொருட்டாய், ஆதார மின்மை குறித்து நின்றது ஆகாய மென்பது, காயமெனத் தலை குறைந்தது. பூரித்தல், கட்டுற்று விரிதல். தோண்டுதல், குறைத்தல், கடலினும் ஆற்று முகம் ஆழம் குறைந்ததாதலின், ஆங்கு வரும் மரக்கலம் செவ்வே நிற்றற்குப் பாய் களைதலும் பாரம் குறைத்தலும் வேண்டுமென வறிக. பெரிய மலக்கலங்களைச் செலுத்தும் தகுதியிலராதலின், அளவர் முதலாயினாரைத் தகாஅர் என்றார். பரதவர், மீன் பிடிப்போர்; அளவர். உப்பு விளைப்போர். பெருங்கலத்தை யென இரண்டாவது விரித்துரைத்தார்; அவ்வாறு செய்யாது பெருங்கலத்தினின்று என ஐந்தாவது விரித்துரைப்பினும் பொருந்து மென்பதாம். நாடு கிழவோய், நீ ஒளித்த துப்பினையாதலின், புலவர் யாங்ஙனம் பாடுவர் என இயையும். 31. சோழன் நலங்கிள்ளி கோவூர் கிழார் என்னும் சான்றோர் இப்பாட்டின்கண் இச் சோழனைப் படுகின்றார். கோவூர் தொண்டை நாட்டிலுள்ளதோர் ஊர். இவ்வூரிற் பிறந்த சான்றோராகிய இவர், சிறந்த நல்லிசைப் புலமை யுடையராதல் ஒருபுறமிருக்க, இவர் செய்த அருஞ் செயல்கள் சில குறிக்கத் தகுவன. சோழன் நெடுங்கிள்ளி யென்பவன், ஆவூரிலும் உறையூரிலும் சோழன் நலங்கிள்ளியின் தம்பியாலும் அந் நலங்கிள்ளியாலும் முற்றுகையிடப் பட்டு அடைபட்டு அஞ்சிக் கிடந்தான். நெடுங்கிள்ளி, நலங்கிள்ளியின் தாயத்தாரில் ஒருவன். அக்காலத்தே இச் சான்றோர் அவற்கு அறிவுறுத்தும்
|