| போல - அறத்தின் பின்னே தோன்றும் காட்சி போல; இரு குடை பின் பட - சேர பாண்டியருடைய இரண்டு குடையும் பின்னாக; ஓங்கிய ஒரு குடை உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க - ஓங்கிய நினது ஒன்றாகிய வெண் கொற்றக்குடை நிறம் பொருந்திய கலை நிறைந்த திங்கள் போல ஓங்கிச் சேய்மைக்கண்ணே விளங்க; நல்லிசை வட்டம் வேண்டி - நல்ல புகழ் வேட்கையை விரும்பி; வெல் போர்ப் பாசறை யல்லது ஒல்லாய் நீ - வெல்லும் போரினைச் செய்யும் பாடிவீட்டின் கண்ணே யிருத்தலல்லது நின்னகரின்கண் இருத்தலை உடம்படாய் நீ; நுதி முகம் மழுங்க மண்டி-கோட்டினது நுனை முகந் தேய மடுத்து; ஒன்னார் கடி மதில் பாயும் நின் களிறு அடங்கல - பகைவரது காவலையுடைய மதிலைக் குத்தும் நின்னுடைய யானைகள் அடங்கா; போரெனில் புகலும் புனை கழல் மறவர் - பூசலென்று கேட்பின் விரும்பும் அணிந்த வீரக் கழலையுடைய மறவர்; காடு இடைக் கிடந்த நாடு - காடு நடுவே கிடந்த நாடு; நனி சேய - மிகவும் தூரிய வாதலால்; செல்வே மல்லேம் என்னார் - யாம் போவேமல்லேமென்று கருதார் ஆதலான்; கல்லென் விழவுடை ஆங்கண் - ஓசையுண்டான விழாவினையுடைய அவ்விடத்து; வேற்றுப் புலத்திறுத்து - பகைப் புலத்தின்கண்ணே தங்கிவிட்டு; குண கடல் பின்ன தாக - கீழ் கடல் பின்னதாக; குட கடல் வெண்டலைப் புணரி - மேல் கடலினது வெளிய தலையையுடைய திரை; நின் மான் குளம்பு அலைப்ப - நினது குதிரையினது குளம்பை யலைப்ப; வலம் முறை வருதலுமுண்டென்று - வலமாக முறையே வருதலு முண்டாமென்று; அலமந்து - சுழன்று; நெஞ்சு நடுங்கு அவலம் பாய - நெஞ்சம் நடுங்கும் அவலம் பரப்ப; துஞ்சாக் கண்ண வடபுலத்தரசு - துயிலாத கண்ணையுடையவாயின வடநாட்டுள்ள அரசுகள் எ-று.
அவம்பாய வென்பதூஉமாம்.
விளக்கம்: உலக வாழ்க்கையில் மக்களால் நெறியறிந்து எய்துதற்கரிய சிறப்புடைய பொருள், அறம் பொருளின்ப மூன்று மாதலால், பொரு ளின்பங்களை, சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் என்றார். சேர பாண்டியர் இருவர் குடைக்கும் பொருளின்ப மிரண்டும் உவமம். நல்லிசை வேட்ட மென்புழி, வேட்டம், வேட்கை யுணர்த்தி நின்றது; உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோரே (புறம்.214) எனப் பிறரும் கூறுதல் காண்க. தூரிய - தூரமுடைய. புணரி - அலை; வெண்டலைப் புணரி (புறம்.2) என வருதல் காண்க. ஒவ்வொரு திசையினும் வென்றி நிலைநாட்டி வரும் முறைமையால் வடதிசையினும் அது நிலைநாட்டற்கு வருவான் என்றற்கு, வலம் முறை வருதலுமுண்` டென்றஞ்சினர். பாய்தல் - பரத்தல்.
|