| பூவா வஞ்சி யென்றது, கருவூர்க்கு வெளிப்படை ஒன்றோ வென்றது எண்ணிடைச் சொல். தேர்க்கா லென்றது, தேர்க்கால் போலும் திகிரியை அவன் கொண்ட குடுமித்து, இந் நாடு; ஆதலால், வஞ்சியையுந் தருகுவன்; மதுரையையும் தருகுவன்; ஆதலால், பரிசின் மாக்கள் நாமெல்லாம் அவனைப் பாடுகம் வம்மினோ வெனக் கூட்டுக. தொன்னிலைக் கிழமையென்று பாடமோதுவாரு முளர்.
விளக்கம் : அடு கலம் - உணவு சமைக்கும் கலங்கள். அடு கலம் நிறையாக என்றது, அக் கலங்கள் நிறையச் சமைக்கப்படும் உணவுப் பொருட்டு விலையாக என்பதாம். பூத்தவஞ்சி வஞ்சிக் கொடிக்கும் பூவா வஞ்சி வஞ்சிமாநகர்க்குமாதலின்; பூவா வஞ்சி யென்றாராக, பூவா வஞ்சி யென்றது கருவூர்க்கு வெளிப்படை யென்று உரைகாரர் கூறினர். கருவூர்க்கும் வஞ்சியென்பது பெயராதலின், இவ்வூர் கருவூர் எனவுரைகாரராற் கொள்ளப்படுகிறது. வஞ்சிநகர் வஞ்சிக்களமென்றும் அது பின்பு அஞ்சைக் களமென்றும் மாறிய காலத்துக் கருவூர் வஞ்சியென வழங்கப்படுவதாயிற்று. நல்ல நிறமுடைய கலவைப் பூச்சினை வண்ண மென்றார். விறலியர் பூவிலை பெறுக என என்றவிடத்து, பூவிலை மடந்தையராய கூத்தியரின் நீக்குதற்கு, பூவிலை யென்பதைப் பூவிற்கு விலையெனப் பிரித்துப் பொருள் கூறினார். இழை பெற்ற விறலியர்,தலையிற் சூடிக்கொள்ளும் பூவிற்கு விலையாக மாட மதுரை தருகுவன் என்றார். இவ் விருநகர்க்குமுரிய வேந்தர் இருவரும் தன் வழிப்பட, இந் நலங்கிள்ளி ஓங்கி விளங்குகின்றா னென முன் பாட்டிற் கூறியதைக் கடைப்பிடிக்க. குயவரது திகிரி, தேர்த் திகிரி போல்வதேயன்றி, அது வாகாமை விளக்குதற்கு, தேர்க்கா லென்றது தேர்க்கால் போலும் திகிரியை யென்றார். சிறார் கலம் வனைதற்பொருட்டுத் திகிரிக்கண் மண் பிசைந்து கொணர்ந்து வைப்பக் குயவன் தான் கருத்திற் கருதிய கலங்களைச் செய்வனாதலால், அவன் கருத்துப்படி உருப்படும் மண்போல, இத் தண்பணை நாடும் நலங்கிள்ளியின் கருத்துப்படி பயன்படு மென்றற்குக் கொண்ட குடுமித் தென்றார். தொன்னிலைக் கிழமை யென்ற பாடங் கொள்ளின், தொன்றுதொட்டே நிலை பெற்ற கிழமையெனப் பொருள் கொள்க. 33. சோழன் நலங்கிள்ளி ஆசிரியர் கோவூர் கிழார் இப் பாட்டின்கண் சோழன் நலங்கிள்ளியின் வென்றி நலம் கூறலுற்று, வேந்தே, தென்னவன் நன்னாட்டிலுள்ள ஏழெயில்களின் கதவுகளை யெறிந்து, அவ்விடத்தே நின் புலிப்பொறியைப் பொறிக்கும் ஆற்றலுடையை; நின்னைப் பாடுவோர் வஞ்சிப் பாட்டுப் பாட, நின் படை வீரர் தங்கியிருக்கும் பாசறைக் கண்ணேயமைந்த தெருவில் பாணர்க்கு ஊன் சோற்றுத் திரள் கொடுக்கப்படும்; இத்தகைய முனையிருக்கைகள் பல உள்ளன; ஊரிடத்தே அல்லிய மாடும் விழாக்கள் பல நிகழ்கின்றனவாயினும், விழாக்களினும் முனையிருக்கைகளே பலவாக உள்ளன என்று கூறுகின்றார்.
| கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் மான்றசை சொரிந்த வட்டியு மாய்மகள் தயிர்கொடு வந்த தசும்பு நிறைய |
|