| தாம் இன்புறுங்காலத்தும் துன்புறுங்காலத்தும் துணையாயுதவின வாதலான் அளியவாயினவென ஆம்பலை நோக்கிக் கூறியவாறாயிற்று. நெல்லலா வுணலெல்லாம் புல்லென்றல் மரபு.
விளக்கம்: இளமகளிர் ஆம்பற பூவாற்றொடுக்கப்பட்ட தழையுடைய யணிந்து தம்மை யழகு செய்துகொள்வது பண்டைநாளில் இயல்பு; அயவெள் ளாம்ப லம்பகை நெறித்தழை தித்திக் குறங்கி னூழ்மா றலைப்ப வரும் (குறுந். 293) என்று சான்றோர் கூறுதல் காண்க.புல்லரிசி யுதவுமாறு, தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியற், சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும், கழிகல மகளிர் (புறம். 280) என வருவதனாலும் அறியப்படும். நெல்லரிசிபோற் பயன் படுவதனைப் புல்லென்றதற்கேது கூறுவாராய், நெல்லலா...மரபு என்றார். ---
249. தும்பைச் சொகினனார் தும்பை யென்பது இவரது ஊர் எனவும், சொகினன் என்பது இவரது பெயரெனவும் கொள்க. தும்பையூர் தொண்டை நாட்டுப் பையூரிளங் கோட்டத்துப் பட்டையநாட்டுத் தும்பையூர் (Nel. Ins. Sulur. 15) என்றும், திருவேங்கடத்துக்கண்மையிலுள்ள திருச்சொகினூர் (திருச்சானூர்) (A.R. No. 452 of 1924) சொகின்னூரென்றிகருந்து திருச்சொகினூரென மருவியிருக்க வேண்டுமென்றும், எனவே இச் சான்றோர் தொண்டை நாட்டுச் சான்றோருள் ஒருவராமென்றும் செந்தமிழ்ச் செல்வி (23-4, 152.) யில் ஆராய்ந்து காட்டப்பட்டுள்ளன. சொகினன் - சொகினம் (நிமித்தம்) கூறுபவன்; சொகினம் பிற்காலத்தே சகுணம் என மருவிவிட்டது.
இவர் பெயர் ஏடுகளில் தும்பி சொகினனாரென்றும், தும்பைச் சொகினனாரென்றும், தும்பி சோகீரனாரென்றும் காணப்படுகின்றன. நற்றிணையுரைகாரர், தும்பி சோகீரனாரென்பதன் பொருள் விளங்காமையால் தும்பிசேர்கீரனாரென்ப பதிப்பித்ததாக வுரைககின்றார்; தும்பி சொகினனா ரென்றே டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிக்கின்றார். சொகினனார், சோகீரனார் என்று பாடங்களைக்காட்டிலும் சேர்கீரனார் என்பது விளக்கமாய் இருப்பது கண்டு முன்னைப் பதிப்புக்கள் தும்பி சேர்கீரனாரென்று கொண்டன;சங்கவிலக்கியப் பதிப்பாளரும் இப் பாடமே கொண்டுள்ளனர். அம்ம வாழியோ மணிச்சிறைத் தும்பி (குறுந். 392) எனத் தும்பியைப் பாராட்டியும், கொடியை வாழி தும்பி (நற். 277)என அதனை நொந்தும் கூறியவாற்றால் தும்பியொடு தொடர்புடைய இவரது சொன்னலம், தும்பிசேர் கீரனார் என்ற பாடத்தை ஏற்றுக் கோடற்கு இடந்தந்து நின்றது.
இச் சொகினனார் கணவனை யிழந்தாள் ஒருத்தி கைம்மை நோன்பு மேற்கொண்டு, அவனுக்கு உணவுபடைப்பது கருதி ஒரு சிறிய இடத்தை ஆவின் சாணத்தால் மெழுகுவதும், அக்காலை யவள் நெஞ்சு கணவனை நினைந்து கலக்கமுறக் கண்ணீர் சொரிவதும் கண்டார். அதனை அவர் கணவனொடு கூடி வாழ்ந்த காலத்துக் கண்டிருந்தோர் கூற்றில் வைத்து இப் பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண் அவள் கணவன் அகன்ற நாட்டுக்குத் தலைவன்; அவன் உயிர்வாழ்ந்த காலத்துப் பலரொடு சூழ விருந்துண்ணும் பரந்த இடமாயிருந்தது; இப்போது அவன் மேலுலகம் சென்றதனால், அவள் தன் கண்ணீரால் ஆவின் சாணங்கொண்டு மெழுகும் சுளகுபோன்ற சிறிய இடமாயிற்று என்று இரங்கிக் கூறுகின்றார். |