பெயர் இடைக்காலத்தும் குழம்பன் என மக்கட்கு இடப்பட்டுளது; சிவப்பிராமணன் பாலாசிரியன் சாத்தன் சிவப்பிரியனான குழம்பன் நாயகன் (S.I.I. Vol. VIII. No.3330) எனவருதல் காண்க. குளம்பனாரென்றொரு நல்லிசைச் சான்றோர் நற்றிணை பாடிய ஆசிரியர் வரிசையுட் காணப்படுகிறார். அவரின்வேறுபடுத்தற்குக் குளம்பனார் மகனார் தாயனாரென்னாது குளம்பந்தாயனார் என்று சான்றோர் இவர் பெயரைக்குறித்திருக்கின்றனர்.
தலைமகனொருவன் போர்க்குச் சென்று களத்திற்பட்டு வீழ்ந்தான். அச் செய்தியறிந்த அவன் மனைவி களத்துக்குச் சென்று அவன் கிடப்பது கண்டு கதறிப் புலம்பினாள். அவள் அவனை நோக்கி, நின்னோடு உடன் வந்த இளைய வீரர் போரிற்கலந்து வினைசெய்கின்றனர். நீயோ இனி யான் இவரோடு கூடமகிழேன் என்றுஇறந்துபட்டாய்.இனி யானும் இறந்துபடுவதை விடுத்து நின்இறப்பை, என் கையைத் தலைமேல் மோதிக்கொண்டு ஊர்க்குட்சென்று நின் சுற்றத்தார்க்குத் தெரிவிப்பேனோ; யாதுசெய்வேன்; எனக்குச் சொல்லுவாயாக எனக் கரைந்துருகி வினவினாள். இதனைக் கண்டிருந்த தாயனார் இப் பாட்டின்கண் குறிக்கின்றார். | என்றிறத் தவலங் கொள்ள லினியே வல்வார் கண்ணி யிளையர் திளைப்ப நகாஅலென வந்த மாறே யெழாநெற் பைங்கழை பொதிகளைந் தன்ன விளர்ப்பின் | 5 | வளையில் வறுங்கை யோச்சிக் | | கிளையி ளொய்வலோ, கூறுநின் னுரையே. |
திணை: பொதுவியல்; துறை: முதுபாலை--குளம்பந்தாயனார் பாடியது. முதுபாலையாவது: காம்புயர் கடத்திடைக் கணவனையிழந்தபூங் கொடியரிவை புலம்புரைத்தன்று.
உரை: என் திறத்து அவலம் கொள்ளல் இனி-நின்னைப் பிரிந்து ஆற்றேனாகின்றேன் என்னுடைய திறத்து வருத்தங் கொள்ளா தொழிவாயாக இப்பொழுது; வல் வார் கண்ணி இளையர் திளைப்ப-வலிய வாராற் சுற்றப்பட்ட கண்ணியையுடைய நின்னோடு கூடி விளையாடப்போந்த இளையோர் விளையாடா நிற்ப; நகாஅல் என வந்த மாறு-அவரோடு நகுகின்றிலேனென்று கருதவந்த நின் இறந்துபாட்டை; நெல்எழா பைங்கழை பொதிகளைந்தன்ன-நெல்லெழாத பசிய மூங்கில் பட்டையொழித்தாற் போன்ற; விளிர்ப்பின் வளையில் வறுங்கை ஓச்சி-வெளுத்திருந்த வளையில்லாத வறிய கையைத் தலைமேலே ஏற்றிக் கொண்டு; கிளையுள் ஒய்வலோ-நின் சுற்றத்திடத்தேசெலுத்தச் செல்லுவேனோ இன்னும் இறந்துபடினல்லது; நின் உரைகூறு-நின் வார்த்தையை எனக்குச் சொல்லுவாயாக; எ - று. |