| அவல மென்றது, பிரிந்த வழி ஆற்றெனென்று வருந்தும் அவலத்தை கூறு நின் உரையென அவன் சொற் கேட்டல் விருப்பினாற் கூறுவாள் போன்று மயங்கிக் கூறியவாறு.
விளக்கம்: நின்னைப் பிரிந்து ஆற்றேனாகின்றேன் என்பது அவலமென்றதனால் பெறப்பட்டதெனக் காட்டற்கு அவலமென்றது...அவலத்தை யென்று உரைகாரர் கூறுகின்றார். அவலம் மிக்க வழி, வாய்திறந்து பேசவியலாமை யுண்டாகுமாதலால், சொற்கேட்கும் விருப்பத்தால் என்திறத் தவலங் கொள்ளல் இனி என்றாள். நகுதல், விளையாட்டுக் குறித்து நின்றது: நகையேயும் வேண்டற்பாற் றன்று (குறய், 871) என்றவிடத்துப்போல. மாறு-இறந்துபாடு. எழாநெல் என்றது மூங்கிற்கு வெளிப்படை. பொதி, ஈண்டுப் பொதிந்திருக்கும் தோலாகிய பட்டைமேல் நின்றது. வளைகிடந்த முன்கையிடம், அது நீங்கியபோது, வளைவடிவில் வெளுத்திருப்பதற்குப் பட்டை நீங்கிய மூங்கில் பட்டை வடிவில் வெளுத்திருப்பது உவமமாயிற்று. செலுத்துதல், தெரிவித்தல், தானும் இறந்துபடத் துணிந்துள்ளமை தோன்ற அவலங் கொள்ளல் என்றது கொண்டு ஒய்வலோ என்றாளாக, இறந்துபடினல்லது என உரைகாரர் உரைப்பாயினர். இறந்தவனைக் கூறு என்கின்றமையின் மயங்கிக் கூறியவாறு என்றார். ---
254.கயமனார் கயமனார் என்னும் இச் சான்றோர். சோழநாட்டினர். கயவென்பது பெருமைப் பொருளுணர்த்தும் சொல்லாதலால், கயமனாரென்பது பெரியவரென்னும் பொருளதாம். இவர் பாடியபாட்டுக்கள் பல ஏனைத் தொகை நூல்களினும் உள்ளன. அப்பாட்டுக்களில் தாயரின் தாய்மை யன்பின் திறத்தைப் பெரிதும்எடுத்துப் பேசியுள்ளார். சோழநாட்டில் குறுக்கையைத் தலைநகராகக்கொண்டு திதியன் என்பான் வாழ்ந்து வந்தான். அவனது காவல் மரம் புன்னை. அன்னி யென்னும் வேறொருவனும் இந் நாட்டில் வாழ்ந்தான். இருவர்க்கும் எவ்வகையாலோ போருண்டாயிற்று அதில் அன்னியென்பவன் திதியனொடு குறுக்கைப் பறந்தலையில் போருடற்றித் தொலைந்தான். தொலையுங்கால், திதியனது காவல் மரத்தை அன்னி வெட்டி வீழ்த்தினான். இச் செய்தியைக் கயமனார் குறிக்கின்றார்.
போர்முடிவில் படாது எஞ்சிய மறவருள் இளையரும் முதியருமாகியோர் பலரும் தத்தமக்குரிய இடஞ்சென்று சேர்ந்தனர். ஒருவீரனுடைய மனைவி போர்க்குச் சென்ற தன் கணவன், மீளவாராமை கண்டு போர்க்களத்துச் சென்றாள். அங்கே அவன்மார்பிற் புண்பட்டு மாண்டு கிடந்தான். கவிழ்ந்து கிடந்த அவனை அவள் தூக்கியிருத்தி, அன்ப, மார்பு நிலத்திற்பட இச்சுரத்திடையே கிடக்கின்றாய்; யான் எடுக்கவும் எழுகின்றாயில்லை. யான் வளை கழித்து என் வறுங்கையைத் தலைமேல் வைத்துஅழுதுகொண்டே நம்முடைய வூர் நோக்கி, இளையனாகிய என்காதலன் இங்ஙனமாயினன் என்று சொல்லிப் புலம்பிச் செல்வேன்; யான் மனைக்குச் சென்று சேருமுன் சுற்றத்தார் பலரும் சூழ்ந்து கொள்வர்; நின் செல்வத்தையும் தலைமையையும் சிறந்தோதி மகிழ்வுறும் நின் தாய் கேட்பாளாயின், அவள் என்னாவாள்; ஐயோ, இதுவோ நின் முடிவு என்று அரற்றிய அரவலத்தை ஆசிரியர்கயமனார் கண்டார். இஃது அவர் நெஞ்சில் நன்கு பதிந்துவிடவே, ஒரு பாட்டாய் வெளி வருவதாயிற்று. வீழ்ந்த போர்மறவன் பெயர் ஏடுகளில் சிதைந்து போயிற்று. |