பக்கம் எண் :

126

     

தீநிமித்தத்தால் உண்டாம் எனக் கருதிய தீங்கை விலக்குதல் வேண்டித்
தெய்வம்பரவினமையின், “கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி” யென்றார்.
அணங்கெனவும் தெய்வமெனவும் கூறாது கடவுள் என்றது, மனமொழிகளின்
எல்லை கடந்து நின்று, உயிர்கள் நுகர்தற்குரிய வினைப்பயன்கள் தாமே
சென்று செய்தவுயிரைச் சாரமாட்டாமையான், அவ்வினைப்பயனை வினை
முதலாகிய உயிர்கள் நுகரச்செய்யும் முழுமுதற் பொருள், தீநிமித்தம்
காட்டும்தீப்பயன் வந்து சாராமை விலக்க வல்லதாமென்பதனால், அதனைக்
கடவுள் எனவும், கடவுள் வாழ்த்தி யெனவும் கூறினார். “கோட்பாலனவும்
வினையுங்குறு காமை யெந்தை, தாட்பால் வணங்கித் தலை நின்றிவை
கேட்க தக்கார்” (திருஞான. மூன், பதி:54) என்று சான்றோர் தெளிய
வுரைப்பது காண்க. குருசிலைக் காணச் செல்லுதற்குக் காரணம், வயிற்றிடை
நின்றுவருத்தும் பசியாதலால், “பசிபடு மருங்குலை” யென்பது கூறப்பட்டது.
யாணர், புதுமை;  sஈண்டு  ஆகுபெயரால்   புதியவாய்ப்பெறப்படும்
பொருண்மேனின்றது. ஒருகாலத் தோரிடத்தேஒருவர் தமக்குரிய
அன்பரைக் கண்டு, பிறிதொருகால் அவரையின்றி அவ்விடத்தைக்
காணின், அஃது அன்பரைப்போல்   இன்பஞ்   செய்யுமென்பது   
இயல்பு.  இதனால் “இரவெழுந்து எவ்வங்கொள்குவையாயின்”
என்றதற்குப் பொருள் கூறுவாராய்,” அவனோடு கூடி யின்புற்றிருந்த
விடத்து அவனையின்றி உயிர் வாழ்தற்பொருட்டு இரக்கக் கடவோம்
என்றெழுந்திருந்து வருத்தங்கொள்வாயாயினும்” என்று உரைகாரர்
கூறுவாராயினர். போலும்:  உரையசை.  போலும்  என்பதை  உவம
வுருபாகவே கொண்டு   கையுள்ளனபோல  மிக்க  அணுமையையுடைய
என இயைத்துரைப்பின், ஈண்டுக் கூறிய உண்டலும் கோடலும் என்ற
இரண்டும் தொழின்மேனின்ற சொற்களாய், அண்மைச் சொற்கு
இயையாதனவாய் இருத்தலின் பொருந்தாமை கண்டேஉரைகாரர்,
கடிதண்மைய வென்றதை ஊரோடியைத்துரைத்தாரென அறிக.
அம்பு வெள்ளம் - அம்புகளாகிய வெள்ளம். பாம்பின்வையெயிற்றுய்ந்த
மதியின் மறவர் கையகத்துய்ந்தன ஆனிரையென்ற இவ்வுவமவழகைக்
கண்ட திருத்தக்கதேவர், சீவகன்நிரை மீட்ட செய்தி கூறலுற்ற விடத்து,
“வாள் வாயுமின்றிவடிவெங் கணையுமின்றிக், கோள்வாய் மதியம் நெடியான்
விடுத்தாங்கு மைந்தன், தோள்வாய் சிலையினொலியாற்றொறுமீட்டு
மீள்வான், நாள்வாய் நிறைந்த நகை வெண்மதிசெல்வதொத்தான்”
(சீவக: 454) என்று தாம்மேற் கொண்டமைத்துப் பாடுவது கண்டு
இன்புறுவது தக்கது. அறமும் புகழுமுடையார்க்கல்லது செல்லுதல்
அரிதாகலின்,மேலுலகம் “அரிது செல்லுலகு” எனப்பட்டது. நிலத்தே
படியவீழாது சாய்ந்து நிற்குமாறு தோன்ற, காலுற்றுத் துளங்கியகம்பம்
என்றார். இலக்கம், விற்பயிற்சி பெறுவார் அம்பு எய்துபயிறற்கு நிறுத்தம்
கம்பம். தோன்றி யென்பதே பாடமாயின் அதுதோன்றியோன் என்று
பொருள்பட வந்த பெயராம்.