| இளைய மணலை நிரம்பப் பரப்புமின்; ஒன்னார் முன்னிலை முருக்கி - பகைவரது தூசிப்படையை முறித்து; பின்னின்று நிரையொடு வரூஉம் என்னைக்கு - பெயர்ந்து போதுகிற தனது படைக்குப் பின்னே நின்று நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்கு; உழையோர் - பக்க மறவராய் நிரை கொண்டு வருவோர்; தன்னினும் பெருஞ் சாயலர் - அவன் தன்னினும் பெரிய இளைப்பை யுடையார்; எ - று.
சாயல் விடாயாலுண்டான் மெை்மை. என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மின் எனக் கூட்டுக.
விளக்கம்: உரவெய்யோன் இனந்தழீஇ, வரவுணர்ந்து கிளை மகிழ்ந்தன்று என்பதற்குப் பொருள் வலியினை விரும்பினோன் ஆனினத்தைக் கைக்கொண்டு வருதலையறிந்து உறவுமுறையார் மன மகிழ்ந்தது என்பது. தொடுதல், பிழிதல், பிழியுங்கால் கோது நீக்கித் தூய நறவு பெறப்படுதலின் அது தெளிந்து தேறலாகிய வழி சிறந்ததாகக் கருதப்படுகிறது. எமக்கே கலங்கல் தருமே (புறம். 298) என்று பிறரும் கூறுவது காண்க. பாசு உவல், பசிய தழை; உவலைக் கூவல் (ஐங். 10) என வருதல் காண்க. இளமணல் - புதுமணல். என்னை - என் தலைவன். பகைவர் தூசிப்படையை வென்றெறிந்து முன்னே வருதலால், உழையோர்க்குத் தலைவனைக் காட்டிலும் இளைப்புப் பெரிதாயிற்றென அறிக. விடாய் - வேட்கை. சாயல் மென்மையாதலால் அதற்குக் காரணம் விடாய் என்பார், சாயல், விடாயாலுண்டாகும் மென்மை யென்றார். 263. கையறுநிலை பகைவர் தன்னூர் நிரைகளைக் கவர்ந்து சென்றனர் என ஆயர்வந்து முறையிடக் கேட்டான் ஒரு தலைமகன். உடனே தன் பக்க மறவர் சூழச்சென்று அப்பகைவரினின்றும் ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வந்தான்.வருங்கால் முன்னே மறவர் ஆனிரைகளைச் செலுத்திக்கொண்டு செல்லத் தான் பின்னே நின்று காவல் புரிந்து வந்தான். வருகையில் பின்னிட்ட வெட்சியார் மீளவும் திரண்டுவந்து நிரை கவரும்பொருட்டுப் போருடற்றினர். பெருகிவரும் புனலை எதிர்நின்று சிறைக்கும் கல்லணை போல் இத்தலைமகன் எதிர்த்து நின்று பொருதான். அவர் பலராய்த் தம் அம்புகளை மிகுதியும் சொரியவே அவை அவன் உடம்பில் ஊடுருவி அவன் உயிரையுண்டன. ஊரவர் அவன் பெயரும் பீடும் எழுதிய நடுகல்லை அவன் பொருட்டு நிறுவிச்சிறப்புச் செய்தனர். பின்பு, அங்கே உடனிருந்து அவன் புகழ்பாடிய சான்றோர்மீளத் தம்மூர்க்குச் சென்றுகொண்டிருக்கையில் எதிரே கிணையுடைய பாணனொருவன் வரக்கண்டு அவனுக்குக் கூறுவாராய், பாண, நீ இவ்வழியே செல்கின்றாயாயின், வழியில் உடன்வந்த மறவர் அஞ்சி நீங்கவும் நீங்காது நின்று வெட்சியாருடன் பொருது நடுகல்லாகிய தலைமகனைக் காண்பாய்; அங்கே அந்நடுகல்லைக் கண்டு வழிபடாது செல்லற்க; வழிபடுவையேல், வறங்கூர்ந்திருக்கும் இவ்வழிவண்டு |