பக்கம் எண் :

133

     

கொல்லுதலாவது கரையை அலைத்துக் கெடுத்தல்; விலங்குதல், குறுக்கிட்டு
நிற்றல். தொழுதவழி நடுகல்லில் நிற்கும் மறவன் தெய்வமாய்ப்பின்
மழைபெய்விக்கும் மாண்புடையனாவன் என்பது கருத்து. இவ்வறனில் யாறே
என்றும் பாட வேறுபாடுண்டு. வண்டின் வினையாகிய மேம்படுதல்,
வழியின்மேல் நின்றது. சேரநாட்டு மலைமுடியில், குட்டநாட்டுக்குத்
தலைவன் வண்டன்; அவனை, “கடவுளஞ்சி வானத்திழைத்த தூங்கெயிற்
கதவம் கொண்ட, எமூஉ நிவந்தன்ன பரே ரெறுழ் முழவுத்தோள்,
வெண்டிரை முந்நீர்வளைஇய உலகத்து, வண்புகழ் நிறுத்த வகைசால்
செல்வத்து வண்டன்” (பதிற். 31) எனக் காப்பியாற்றுக் காப்பியனார்
கூறுதல் காண்க. இவ்வண்டன் வழியினரை நினைந்து, “வண்டென்பது
மறவருள் ஒருசாதி யென்பாருமுளர்”எனப் பழைய வுரைகாரர் கூறுகின்றார்
அம்மலைப்பகுதி இப்போது ‘வண்டன் மேடு’ என வழங்குகிறது.
பொன்னானி வட்டத்து மூதூர்களுள் வண்டூர் என்பது இந்தக் குறிப்புக்கு
ஆதரவு தருகிறது. தூய்மையில்லாதான் ஒருவனை வையுமிடத்து,
மக்கள் “இவன் ஒரு வண்டல்” என்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது.

264. உறையூர் இளம்பொன் வாணிகனார்

     இளம் பொன்னென்பது ஓடுதலுடைய மாற்றுக் குறைந்த பொன்னாகும்.
இதனை வாணிகம் செய்தது பற்றி இவர் இளம்பொன் வாணிகராயினார்.
இத்தகைய வாணிகர் காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரையிலும் வஞ்சியிலும்
பிறநகரங்களிலும் இருந்தனர். பொன்வகையுள் சாதரூபமும் கிளிச்சிறையும்
இளம் பொன்னாதலால், இவற்றை உரைத்து உரையால் அறுதியிட்டு
வாணிகம் செய்வோர் இளம்பொன் வாணிகராயினர். செயலூர்
இளம்பொன் சாத்தன் கொற்றனாரென்னும் சான்றோருடைய தந்தையாரும்
இவ்வகையினறே. முல்லைப்பாட்டின் ஆசிரியராகிய நப்பூதனாருடைய
தந்தையும் பொன் வாணிகரே; என்றாலும் அவர் இளம்பொன்
வாணிகரல்லர். சான்றோர் கூட்டத்துள் இவர் இயற்பெயர் வழங்காது
இளம்பொன் வாணிக ரென்ற பெயரே பயில வழங்கினமையின், இந்நூலைத்
தொகுத்த ஆசிரியர் உறையூர் இளம்பொன் வாணிகனாரென்றே
குறித்தொழிந்தார்.

     ஒரு தலைவன் தன்னூரினின்றும் நிரைகளைக் கவர்ந்துசென்ற
பகைவரை வென்று வெருட்டியோட்டி, அவற்றை மீட்டுக் கொணர்ந்து
ஊரில் உரியவர்க்குக் கொடுத்தான். அவன் அவ்வாறு கொடுப்பினும்,
நிரை மீட்கும் போரில் புண்பட்டமையின், அதுவே வாயிலாக உயிர்
துறந்தான். சான்றோர் அவன் பெயரும் பீடும் எழுதிய நடுகல்லை
அவன் பொருட்டு நாட்டி மயிற் பீலியும் பூமாலையும் சூட்டிச் சிறப்புச்
செய்தனர். அங்கேயிருந்த சான்றோருள் உரையூர் இளம்பொன்
வாணிகனாரும் ஒருவராவர். அவர், “இத்தலைவன் உயிரோடிருந்த
காலத்தில் நெடுஞ்சுரத்து நின்ற நிழல் மரம்போல் பாணர் முதலிய
இரவலர்க்கு இனிய அருள்புரிந்து வந்தவன்; இவன் நடுகல்லாகியது
பாண் சுற்றத்தார்க்குத் தெரியுமோ தெரியாதோ? பாணர் தெரியாது
வந்து மன்றம் புகுந்து மறுகுசிறை பாடுவரேல், கேட்போருக்குக்
கையறவு மிகுமே; பாணர் கூட்டம் அறியாது இன்னும் வருமோ?
வராமை நன்றன்றோ” என இரங்கி இப்பாட்டைப் பாடினர்.