| | பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொ டணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித் தினிநட் டனரே கல்லுங் கன்றோடு | 5 | கறவை தந்து பகைவ ரோட்டிய | | நெடுந்தகை கழிந்தமை யறியா தின்றும் வருங்கொல் பாணரது கடும்பே. |
திணையும் துறையும் அவை...உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.
உரை: பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி - பருக்கைகளையுடைய இடத்துத் திட்டையைச் சேர்த்தி; மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு - ஆண்டுள்ள மரலைக் கீறித் தொகுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியுடனே; அணி மயில் பீலி சூட்டி - அழகிய மயிலினது பீலியைச் சூட்டி; பெயர் பொறித்து - பெயரை எழுதி; இனி நட்டனர் கல்லும் - இப்பொழுது நட்டார் கல்லையும்; கன்றொடு கறவை தந்து - கன்றுடனே கறவையையும் மீட்டுக் கொண்டுவந்து; பகைவர் ஒட்டிய நெடுந்தகை - மறவரை யோட்டி நோக்கிய நெடுந்தகை; கழிந்தமை அறியாது - பட்டமை அறியாது; இன்னும் வரும்கொல் பாணரது கடும்பு - இன்னும் வருங்கொல்லோ பாணரது சுற்றம்; எ - று.
பட்டமையறிந்து வாராதொழியுமோ, அறியாது வருமோ என ஐயமாக்குக. பதுக்கை சேர்த்ததேயன்றிக் கல்லும் நட்டனரென உம்மை எஞ்சிநின்றது.
விளக்கம்: பருக்கைக்கற்கள் நிறைந்திருக்கும் இடம் பரலுடைய மருங்கு எனப்பட்டது. பதுக்கையென்றது மேடையென்னும் பொருள் பட நின்றது. மரலிடத்து எடுத்த நார் கொண்டு செம்பூங்கண்ணி தொடுத்தனர் என்பார், மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணி என்றார். மரல், கற்றாழையினத்தைச் சார்ந்தது. செம்பூங்கண்ணியும் மயிற்பீலியும் சூட்டி யென்றவாறு. பெயரும் பீடும் எழுதி நீர்ப்படுத்துக் கண்ணியும் பீலியும் சூட்டிக் கல் நாட்டுவது முறையாக நீர்ப்படுத்துக் கண்ணியும் பீலியும் சூட்டிப் பெயர் பொறித்தபின் கன்னடுவது கூறுவது கண்ட நச்சினார்க்கினியர், அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து,இனி நட்டனரே கல்லும் எனக் கன்னாட்டுதல்பெரும் படைக்குப் பின்னாகக் கூறிற்றாலெனின், நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து நாட்டுதல் காட்டு நாட்டோர் முறைமையென்பது,சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை (தொல்.புறத்.5) என்புழிச் சீர்த்தகு சிறப்பின் என்பதனாற் கொள்க என்பர். மரல்நார் கொண்டு கண்ணி தொடுப்ப துண்டென்பதை, தளிரொடு மிடைந்த காமர் கண்ணி, திரங்குமரல் நாரிற் பொலியச் சூடி (மலைபடு. 430) என்று சான்றோர் கூறுவதனாலுமறிக. இது தலைவன் பட்டது கண்டு பாணன் கூற்றில் வைத்துக் கையற்றுப் பாடியது. |