பக்கம் எண் :

136

     

களிற்றியானைகளையுடைய வேந்தரது மடியாத வென்றியும்; நின்னொடு
செல - நின்னோடே கழிய; எ - று.


     வானேறு புரையும் நின் தாணிழல் என்றது மழைபோலும்
வண்மையுடைமையும் பகைவர்க்கு இடிபோலும் முரணுடைமையும் கருதி.
தன்னுடைய வேந்தனுக்குப் போருண்டாகிய போழ்தெல்லாம் வென்றி தந்து
போந்தமையின் வென்றியும் அவனோடே கழிந்த தென்றார். தோன்றல்,
செல்வமன்றியும் வென்றியும் நின்னோடுசெலக் கல்லாயினை எனக் கூட்டுக.
சூட்டவென்றது சூட்டி வழிபட எனக் காரியத்தின்மேல் நின்றது.

     விளக்கம்: முகையலூர் என்பது இடைக் காலத்தில் முகலாறு என
(M. Ep. A.R. No. 214 of 1936-7) வழங்கி இப்போது மொகலாரென
வழங்குகிறது. இதற்கு முகையலென்றும் பெயருண்மையின் சோணாட்டு
முகையலூர் இதுவென்று துணியலாம். பண்டைக்காலத்துச் செங்கைமா
வென்பது இடைக்காலத்தில் செங்கமா(S.I.I. Vol. VIII No. 177)என வழங்கி,
இக்காலத்துப் பொதுமக்களாலும் அரசியல் ஏடுகளாலும் செங்கம் என்று
வழங்குவது இதற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டு. இப்பாட்டின் முதன்
மூன்றடிகட்கே பழையவுரை கிடைத்துளது. “பல்லான் கோவலர்” என்பது
முதல் இறுதி வரையுள்ள பகுதிக்குப் புத்துரை இப்போது வகுக்கப்பட்டுளது.
பார்-முரம்பு. இம்முரம்பினைத் தொண்டைநாட்டார் பாரெனவே வழங்குவர்.
கரந்தைப் போருடற்றிக் கல்லாயினனாதலின், பல்லான் கோவலர் படலை
சூட்டி வழிபட்டனரெனவறிக. பரிசிலரைத் தாணிழல் வாழ்க்கையரென்றார்;
பிறரும் “யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை, யவன் பெறுக
வென்னாவிசை நுவறல்” (புறம். 379) என்று பரிசிலன் கூறுவதாக வுரைப்பது
காண்க. “வேந்தர் வென்றியும் நின்னொடு செல” வென்றது, வேந்தர்க்குத்
துணையாய் நின்று பொருது வெற்றி யெய்துவிக்கும் விறலுடைமை விளக்கி
நின்றது; இது, கன்னின்று “கடவுளாகியபின் கண்டது” (புறத்.5) என்பர்
நச்சினார்க்கினியார்.


---

266. சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி

     சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி உறையூரிலிருந்து
ஆட்சியுரிந்து வருகையில் பெருங்குன்றூர்கிழார் தாமுற்ற வறுமைத்
துயர்க்காற்றாது அவன்பால் பரிசில் பெறச் சென்றார். அவனும் அவரை
வரவேற்றுச் சின்னாள் தன்பால் வைத்திருந்து அவரது புலமை நலத்தைத்
துய்த்து வந்தான்.அவன்பால் அவர் பன்முறையும் குறிப்பால் தமது வறுமைத்
துன்பத்தைக்  கூறினார்.  அவன் அதனை யுணராதவன்போல் அவருடைய
துணைமை யின்பத்தை விழைந்திருந்தான். முடிவில் பெருங்குன்றூர்கிழார்
தமது  கருத்தை  வெளிப்படையாக  எடுத்துரைப்பதென்று துணிந்தார்.
அத்துணிவின் பயனாக இப்பாட்டுப் பிறந்தது.இதன்கண்,“வேந்தே,சான்றோர்
இருந்த அவையின்கண் ஒருவன் போந்து தன் குறையை முறையிட்டுத்
தனக்குப் பற்றாக வேண்டினானாயின்,அவர்களால் அவனது குறை
கடிதில் தீர்த்து வேண்டுவன செய்யப்படும்; எனக்குப் பிறிதொரு
குறையில்லையாயினும் விருந்து கண்டால் அவரை ஓம்பமாட்டாத
வறுமையாகிய குறையொன்று என்பால் தங்கி வருத்துகிறது;