பக்கம் எண் :

138

     

வரப்பட்ட விருந்தினரைக் கண்டுவைத்து அவர்க்கு விருந்தாற்றமாட்டாமல்
ஒளிக்கும் நன்மையில்லாத இல்வாழ்க்கையையுடைய;பொறிப்புணர் உடம்பில்
- தோன்றி ஐம்பொறியும் குறைவின்றிப் பொருந்திய எனது யாக்கையின்கண்
தோன்றி; என் அறிவுகெட நின்ற நல்கூர்மை - அவற்றானாய பயன்
கொள்ளாதபடி எனது அறிவுகெட நிலைபெற்ற வறுமையை; எ - று.


     மதியும் அத்தையும் அசைநிலை. பெருவிறல், சென்னி, சான்றோர்
இருந்த அவையத்துற்றோன் பூசலை அவர் விரையக் களைந்தாற்போல
எனது நல்கூர்மையை வல்லே களையெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     நந்து வளையொடு பகல் மணம் புகூஉம் என்ற கருத்து: அவை தம்
செருக்கினால் சாதியறியாது மயங்கிப்புணரும் என்று நாடடின் மிகுதி
கூறியதனால் அவன் செல்வ மிகுதி கூறியவாறு. “நாகிளந் தவளையொடு
பகல்மணம்  புகூஉம்” என்று  பாடமோதி  நந்தினேற்றை   நாகிளந்
தவளையுடனே தத்தம் இனத்தொடு மணம் புகூஉமென்றுரைப்பினு மமையும்.
ஆசாகு என்பதனை இரங்கற் குறிப்புப்படு மொழி யென்பாரு முளர். பெரு
விறலையுடைய வயமான் சென்னி யெனினுமாம்.

     “பொறிப் புணருடம்பிற் றோன்றி” யென்பதற்குப் பாவைபோலும்
வடிவு மாத்திரையே தோன்றித் தோன்றிய பயன் கொள்ளாமையால்
என் அறிவு கெடநின்ற நல்கூர்மை யென்றும், “விருந்து கண்டொளிக்கும்”
என்பதற்கு வறுமைகண்டு வந்த விருந்து தாம் அது காணமாட்டாது
ஒளிக்குமென்றும் உரைப்பாருமுளர். மாறியென்பது மாறவெனத்
திரிக்கப்பட்டது.

     விளக்கம்: களியாய் முளிதலாவது, ஆழ அகழ்ந்தாலும் நீர் ஊறா
தொழிவது.நத்தையின் நீண்ட மயிர்போற்றோன்றும் இருதண்டுகளும் கோடு
எனப்பட்டன. அத்தண்டுகள் முனையில் நத்தையின் கண்கள் உள்ளன;
அவை நத்தைக்கு உணர் கருவியுமாம். ஏற்றை,ஆண்.நாகு,பெண்பால்
குறித்துநின்றது. பேராசிரியர், “நீர்வாழ் சாதியுணந்து நாகே” (தொல்.மரபு.63)
என்பதற்கு “நாகிள வளையொடு பகன் மணம் புகூஉம்” எனும் இதனை
யெடுத்துக் காட்டுவர். உற்றோன், இடம்பற்றித் துன்பமுற்றோன் என்பதுபடி
நின்றது. ஆசாக என்னும், ஆசாகென்னும் என முடிந்தது. ஆசாக என்னும்
பூசல், பற்றாகல் வேண்டுமென முறையிடும் ஆரவாரம். “வல்லே களைமதி”
யென்பதற்கேற்ப உவமைக்கண்,பூசலை அவையத்தோர் விரையத்
தீர்க்குமாறு வருவிக்கப்பட்டது. உள்ளிய, உள்ளிவந்த. விருந்து வரக்
கண்டதும் விரும்பி வரவேற்பதைவிடுத்து ஒளித்தற்குக் காரணம்
வருவிக்கப் பட்டது. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பது
இல்வாழ்வுக்குச் சிறப்பாதலின், விருந்து கண்டொளிக்கும் வாழ்க்கை
திருந்தா வாழ்க்கையெனப்பட்டது. திருந்தாமை, நன்மை யில்லாமை.
நல்கூர்மை, இன்மையெனப்படும்; அறிவுடைமையே உடைமை;
ஆகவே, நல்கூர்மையுளதாயவழி அறிவுகெடுதல் ஒரு தலையாதலின்,
“அறிவு கெட நின்ற நல்கூர்மை” யென்றார். “ஆசாகு” என்பது அந்தோ,
அன்னோ என்றாற்போல இரங்கற் பொருண்மை யுணர்த்தும் குறிப்பு
மொழியாகவும் கோடல் உண்டு என்பார் “ஆசாகு...முளர்” என்றார்;
“ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ” (புறம். 235) என ஒளவையார்
கூறுவது காண்க. விருந்துகண்டு என்புழி, விருந்தை எழுவாயாகவும்,
கண்டென்றதை அதன்